பல்வேறு வகைகளில் சமூக, குடும்ப மேம்பாட்டிற்காகவும் நலனுக்காகவும் பங்களிக்கும் 20,000க்கும் மேற்பட்ட தொழில்முறை சமூகச் சேவையாளர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக 2025ஆம் ஆண்டு சமூகச் சேவை நிபுணர்களைக் கொண்டாடும் ஓர் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசியச் சமூகச் சேவை மன்றத்தின் சமூகச் சேவைத் திறனாளர் அணியின் கருத்தரங்கில் இதனைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அறிவித்தார். தேசிய அளவில் அச்சமூகச் சேவையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் பல துறைகளில் புதிய விருதுகள் வழங்கப்படும் என தேசியச் சமூகச் சேவை மன்றமும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
தொழில்முறைச் சமூகச் சேவையாளர்களுக்கான அதிபர் விருது, உன்னதம், தகுதிசார் விருதுகள் (Excellence and Merit Awards), உன்னத சமூகச் சேவை அணி விருது (Social Service Excellence Team Awards) உள்ளிட்ட புதிய விருதுகள் இவ்வாண்டு வழங்கப்பட உள்ளன.
இவ்வாண்டு பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்வது தொடங்கப்பட்டு, ஆண்டின் இரண்டாம் பாதியில் இவ்விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சமூகச் சேவையாளர்களின் அளப்பரிய பங்கு, அவற்றின் முக்கியத்துவம், மாறிவரும் சமூகத் தேவைகள் உள்ளிட்டவை குறித்து பேசினார் அமைச்சர் மசகோஸ்.
‘ட்ரு நார்த்’ எனும் பாடலை ஒளிபரப்பி, அதனைச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் கொண்டு தாம் வடிவமைத்ததையும் சுட்டினார். அதன்மூலம், தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டினார். அதற்கேற்ப தயார் நிலையில் இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார்.
வரும் ஆண்டு மேற்கொள்ளவேண்டிய மூன்று முக்கிய முயற்சிகள் குறித்தும் தமது உரையில் தெரிவித்தார்.
“சமூகச் சேவைக் கட்டமைப்புகளைப் புதுப்பித்து மறுவடிவமைப்பு செய்ய வேண்டும். சமூகச் சேவை ஊழியர்களின் பணி ஈடுபாடு, பணிச்சூழல் உள்ளிட்டவற்றைக் கவனமாக ஆராய்ந்து உரிய மேம்பாடுகள் செய்ய வேண்டும். தொழில்முறை நிபுணர்களின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும்,” என்று சொன்னார். அவற்றுக்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளையும் விளக்கினார் அமைச்சர்.
தொடர்புடைய செய்திகள்
குடும்ப, சமூகச் சேவைகளை மேம்படுத்தும் வாய்ப்புகள் குறித்த கருத்துகளைக் கேட்டறிந்து, மதிப்பாய்வு செய்யும் நோக்கில் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் டான் டாய் யோங் ஆகியோரது தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.
போட்டித்தன்மைமிக்க வகையில் சமூகச் சேவை ஊழியர்களுக்குத் தகுந்த ஊதியம் கிடைப்பதற்காகத் துறை சார்ந்த திறன்கள், சம்பளம் குறித்த வழிகாட்டுதல்கள் மறுஆய்வு செய்யப்படுவதையும் சுட்டினார் அவர்.
“சிங்கப்பூரின் 60வது ஆண்டு, ‘சமூகச் சேவை நிபுணர்களைக் கொண்டாடும் ஆண்டாகக் அறிவிக்கபட்டுள்ளது. ஒவ்வொரு சிங்கப்பூரரும் மதித்து பராமரிக்கப்படும் சமூகத்தை நோக்கிய பயணம் தொடரும் என நம்புகிறேன்,” என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூரில் சிறுநீரக நோய்களின் தாக்கம் குறித்து உரையாற்றினார் தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் ஓய். பலதுறை வல்லுநர்களின் கலந்துரையாடலும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.
கடந்த 2023, சமூகச் சேவை பங்காளிகளைக் கொண்டாடும் ஆண்டாகவும் 2024ஆம் ஆண்டு, சமூகச் சேவை தொண்டூழியர்களைக் கொண்டாடும் ஆண்டாகவும் அனுசரிக்கப்பட்டன.

