2026 பள்ளி ஆண்டு ஜனவரி 2ல் தொடக்கம்

2 mins read
f8b9a6c1-ecae-4157-bdd3-47a4aab6fa11
அடுத்த ஆண்டு, கல்வி அமைச்சின்கீழ் செயல்படும் பாலர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கான பள்ளி கடைசி நாள் நவம்பர் 20. - படம்: ஸட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2026ஆம் ஆண்டில் பாலர் பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவர்கள், தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கான பள்ளி ஆண்டு ஜனவரி 2ல் தொடங்குகிறது.

தொடக்கநிலை இரண்டு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கும் பாலர் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியன்று தொடங்குகிறது.

இது கல்வி அமைச்சின்கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குப் பொருந்தும்.

இத்தகவலைக் கல்வி அமைச்சு புதன்கிழமை (ஜூலை 30) வெளியிட்டது.

தொடக்கக் கல்லூரி, மிலெனியா கல்வி நிலையம் முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 4ல் தொடங்கும்.

தொடக்கக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்களும் மிலெனியா கல்வி நிலையத்தைச் சேர்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களும் தங்கள் பள்ளி ஆண்டை ஜனவரி 12ல் தொடங்குவர்.

பாலர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கான பள்ளி கடைசி நாள் நவம்பர் 20.

ஆனால் ஜிசிஇ சாதாரண நிலை தேர்வுக்காகப் பயன்படுத்தப்படும் பள்ளிகளுக்கான பள்ளி ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதியுடன் நிறைவடையும்.

தொடக்கக் கல்லூரி முதல் ஆண்டு மாணவர்களுக்கும் மிலெனியா கல்வி நிலையம் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் பள்ளி ஆண்டு நவம்பர் 27ஆம் தேதியுடன் நிறைவடையும்.

அடுத்த ஆண்டு இளையர் தினம் ஜூலை 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படும். எனவே, ஜூலை 6 (திங்கட்கிழமை) பள்ளி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தினமும் சிறார் தினமும் முறையே செப்டம்பர் 4 மற்றும் அக்டோபர் 2ல் அனுசரிக்கப்படுகின்றன.

இத்தேதிகள் பள்ளி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நோன்புப் பெருநாள் அடுத்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதியன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதி செய்யப்பட்டால் மார்ச் 23ஆம் தேதி (திங்கட்கிழமை) பள்ளி விடுமுறையாக அறிவிக்கப்படும்.

விசாக தினமும் தீபாவளியும் வாரயிறுதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் என்பதால் அவற்றை அடுத்த திங்கட்கிழமைகளும் பொது விடுமுறைகளாக அறிவிக்கப்படும்.

2026ஆம் ஆண்டுக்கான பள்ளி நாள்கள், விடுமுறைகள் ஆகியவை https://www.moe.gov.sg/calendar எனும் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு சிங்கப்பூரர்களுக்கு ஆறு நீண்ட வாரயிறுதிகள் இருப்பதாக ஜூன் 16ஆம் தேதியன்று மனிதவள அமைச்சு வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்