2027ஆம் ஆண்டில் மிதமான ஒட்டுமொத்தச் சம்பள உயர்வையே ஊழியர்கள் எதிர்பார்க்க வேண்டும் என அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, வேலை மாற விரும்பும் நிபுணர்கள், முதலாளிகள் வழங்கத் தயாராக இருக்கும் தொகையைவிட அதிகச் சம்பள உயர்வை எதிர்பார்ப்பதாக அந்தக் ஆய்வு கண்டறிந்துள்ளது.
மனிதவளத் தீர்வுகள் நிறுவனமான ‘ராபர்ட் வால்டர்ஸ்’ திங்கட்கிழமை (நவம்பர் 23) வெளியிட்ட சம்பள நிலவர ஆய்வின்படி, அடுத்த ஆண்டு புதிதாகப் பணியமர்த்தப்படுவோருக்குக் குறைந்தபட்சம் 6 விழுக்காட்டுச் சம்பள உயர்வு வழங்க ஏறத்தாழ 49 விழுக்காட்டு முதலாளிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், வேலை தேடுவோரில் 75 விழுக்காட்டினர் 10 விழுக்காட்டிற்கும் அதிகமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றனர்.
2027ஆம் ஆண்டில் திறனாளர்களை ஈர்ப்பதிலும் தக்கவைத்துக்கொள்வதிலும் நிறுவனங்கள் மிகவும் எச்சரிக்கையான மற்றும் நுணுக்கமான அணுகுமுறையைக் கையாள முயலும் அதே வேளையில், 78 விழுக்காட்டு நிபுணர்கள் புதிய வேலையைத் தேடக்கூடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
“பரவலான சம்பள உயர்வு அல்லது கண்மூடித்தனமான ஆட்சேர்ப்பு மீண்டும் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என ‘ராபர்ட் வால்டர்ஸ் சிங்கப்பூர்’ நிறுவனத்தின் மேலாளர் கிர்ஸ்டி போல்டாக் தெரிவித்தார்.
“2027ஆம் ஆண்டில், முக்கியத் திறன்களில் இலக்கு வைக்கப்பட்ட முதலீடு, நீக்குப்போக்குள்ள திறனாளர் மாதிரிகளின் அதிகப் பயன்பாடு, உற்பத்தித்திறன், திறன் உருமாற்றம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதை நாம் காண்போம்,” என்றும் அவர் கூறினார்.
விநியோகச் சங்கிலி, கொள்முதல் மற்றும் தளவாடங்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், தொழில்நுட்பம் மற்றும் உருமாற்றம் ஆகிய துறைகளில் வேலை மாறும் ஆர்வம் குறிப்பாக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால், அதனுடன் ஒப்பிடுகையில் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் ஊழியர்களின் நம்பிக்கை கணிசமாகக் குறைவாகவே உள்ளது. அதன் ஒட்டுமொத்தச் சராசரி 48 விழுக்காடாக மட்டுமே இருக்கிறது.
