சிங்கப்பூரில் உள்ள பிரதான துணிக் கடைகளிலிருந்து 868 பொருட்களைத் திருடிய நான்கு வியட்னாமியர்களை போலிசார் கைது செய்துள்ளனர். கடைகளிலிருந்து பொருட் களைத் திருடும் குற்றத்தின் பேரில் இதுவரை பிடிபட்டோரில் இந்த நால்வரும்தான் ஆக அதிக மான பொருட்களைத் திருடி உள்ளனர். கைதானவர்களில் இரண்டு ஆடவர்களும் இரண்டு பெண் களும் அடங்குவர். அவர்கள் 26 வயதுக்கும் 31 வயதுக்கும் இடைப் பட்டவர்கள். பெண்களின் உள்ளாடைகள், துணிமணிகள் ஆகியவற்றை இந்தக் கும்பல் திருடியது. திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட $26,000- ஆகும்.
கடைகளில் பொருத்தப் பட்டுள்ள உணர் கருவிகளிடம் சிக்காமல் இருக்க, திருடிய பொருட்களை மெல்லிய தகரத் தாட்களால் உட்புறம் தைக்கப்பட்ட பைகளில் வைத்து அங்கிருந்து அந்த நால்வரும் வெளியேறியதாக செய்தியாளர் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு ஒவ்வொரு கடை யிலும் அவர்கள் பலமுறை திருடியதாகக் கண்காணிப்பு கேமராவில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். அந்த நால்வரையும் நேற்று முன்தினம் சின் சுவீ சாலையில் பிடோக் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கைது செய்தனர்.
வியட்னாமிய கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துணிமணிகளைச் சரிபார்க்கும் போலிஸ் அதிகாரிகள். பறிமுதல் செய்யப்பட்ட ஆடைகளில் பல உள்ளாடைகளும் அடங்கும். திருடப்பட்ட துணிகளின் மதிப்பு கிட்டத்தட்ட $26,000. கைது செய்யப்பட்ட நால்வர் மீதும் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

