சம்பள பாக்கி: என்டியுசி யு கேர் நடவடிக்கை

சம்பள பாக்கி: என்டியுசி யு கேர் நடவடிக்கை

2 mins read

சம்பளம் தரப்படவில்லை எனக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத் திலிருந்தது கடந்த ஜூன் மாதம் வரை தன்னிடம் முன்வைக்கப்பட்ட 322 புகார்களை தேசிய தொழிற் சங்க காங்கிரஸ் (என்டியுசி) யு கேர் நிலையம் கையாண்டது. இந்தத் தகவலை என்டியுசியின் தலைமைச் செயலாளர் ஸைனால் சபாரி தமது வலைத்தளத்தில் நேற்று பகிர்ந்துகொண்டார். ஒரு மாதத்துக்குச் சராசரியாக 20 புகார்கள் செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குக் கொடுக்கப்படாத வருமானத்தின் மொத்த அளவு $1.66 மில்லியன் என்றும் திரு சபாரி தெரிவித்தார். வேலை தொடர்பான விவகாரங் களில் குறைந்த வருமான ஊழியர் களுக்கு என்டியுசி யு கேர் நிலையம் ஆதரவு வழங்குகிறது.

முதலாளிகள் தங்களுடைய சம்பளத்தைக் கொடுக்காத பட்சத்தில் ஊழியர்கள் நிலை யத்தின் உதவியை நாடலாம். தங்களுடைய சம்பளத்தை முதலாளிகள் கொடுக்காமல் இருக்கும்போது, அடுத்து என்ன செய்வது என்று ஊழியர்கள் சிலர் செய்வதறியாது தவிப்பதாக நிலையத்தின் இயக்குநருமான திரு சபாரி கூறினார். சம்பளம் கொடுக்கப்படா விட்டாலும் தொடர்ந்து வேலை செய்யும் ஊழியர்களும் உள்ளனர் என்றார் அவர். சம்பளம் கொடுக்கப்படாதது குறித்து புகார் செய்ய அவர்கள் தயங்கக்கூடும் என்றும் திரு சபாரி கூறினார். "தங்களுடைய சம்பளத்தை முதலாளிகள் தரவில்லை என்று அவர்களுக்கு எதிராகப் புகார் செய்தால் வேலையை இழக்க நேரிடும் என்று சிலரிடையே அச்சம் இருக்கலாம். "தங்களுடைய பிரச்சினையை யாரிடமும் சொல்ல முடியாமல் இந்த ஊழியர்கள் சிரமப்படு கின்றனர். "முதலாளி என்றாவது ஒருநாள் சம்பளத்தைக் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் தொடர்ந்து வேலை செய்கின்றனர்," என்றார் திரு சபாரி.