தாய்லாந்து நாட்டவர்களுக்கு தானியக்க குடிநுழைவுச் சோதனை வசதி

தாய்லாந்து நாட்டவர்களுக்கு தானியக்க குடிநுழைவுச் சோதனை வசதி

1 mins read

தாய்லாந்து கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள், வரும் திங்கட்கிழமையிலிருந்து 'அடிக்கடி பயணம் செய்பவர்' எனப்படும் திட்டத்தில் சேர முடியும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் சேர தகுதிபெறும் தாய்லாந்து நாட்டவர்கள், சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளில் தானியக்க குடிநுழைவுச் சோதனை வசதிகளைப் பயன்படுத்த முடியும். தற்போது, சிங்கப்பூர் கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர், தாய்லாந்தின் சோதனைச் சாவடிகளில் தானியக்க குடிநுழைவுச் சோதனை வசதிகளைப் பயன்படுத்துகின்றனர்.

இத்திட்டத்தில் சேருவதற்கு தகுதிக்கூறுகள் சிலவற்றைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது, ஆறு வயதுக்கும் மேற்பட்ட தாய்லாந்து நாட்டவர்கள் வைத்திருக்கும் கடவுச்சீட்டுகள் காலாவதியாவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் எஞ்சியிருக்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளில் சிங்கப்பூருக்கு குறைந்தது இரு முறையாவது அவர்கள் வருகை தந்திருக்க வேண்டும். இந்தத் தகுதிக் கூறுகளைப் பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்கள் இந்தத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.