டாக்சி ஓட்டுநர் காயமடைந்து இருந்த காரணத்தினால், கவனிப்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த டாக்சிக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் ரத்து செய்துள்ளது. சையது ஆல்வி சாலையில், இரு ஆடவர்கள் அந்த டாக்சியை நோக்கி ஒரு தள்ளுவண்டியைத் தள்ளிவிட்டு, பின்னர் அந்த டாக்சியின் ஓட்டுநரை அவர்கள் சரமாரியாக தாக்குவதைக் காட்டும் காணொளி சிங்கப்பூர் டாக்சி ஓட்டுநர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாயிறன்று பதிவேற்றப்பட்டது.
அந்தக் காணொளியை எடுத்த இணையவாசி யாங் ஷிமிங், தமது டாக்சி மீது தள்ளுவண்டியைத் தள்ளிவிட்ட இருவரிடம் பேசுவதற்காக டாக்சி ஓட்டுநர் வாகனத்திலிருந்து கீழே இறங்கியதாகவும் அப்போது அவர்கள் அவரைத் தாக்கியதாகவும் வழிப்போக்கர் ஒருவர் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் காணொளியில் அமலாக்கப் பிரிவு அதிகாரி தாம் வைத்திருந்த கருவியில் தட்டச்சு செய்வதைப் பார்க்க முடிகிறது. டாக்சி ஓட்டுநருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து யாரோ அந்த அதிகாரியிடம் கூறியது யாங் காதிலும் விழுந்துள்ளது. ஆனாலும் அந்த அதிகாரி தமது கருவியில் தொடர்ந்து பதிவேற்றம் செய்துள்ளார்.
"அபராதம் விதிக்கப்பட்ட நேரத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரி, டாக்சி ஓட்டுநரை அங்கு பார்க்கவில்லை. அதனால் கவனிப்பாரற்று இருந்த டாக்சிக்கு அபராதம் விதிக்கும் தமது பணியை அவர் தொடர்ந்தார்," என்று ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு விளக்கமளித்துள்ளது. பின் அந்த அதிகாரியை பொதுமக்களில் ஒருவர் அணுகி, டாக்சி ஓட்டுநர் காயமடைந்து இருப்பது பற்றி கூறியுள்ளார். சம்பவம் குறித்து விசாரித்த பின்னர், அபராதம் ரத்து செய்யப்பட்டது என்று ஆணையம் குறிப்பிட்டது.2018-10-12 06:00:00 +0800

