கிராஞ்சி வட்டாரத்துக்கும் சுவா சூ காங் வட்டாரத்துக்கும் இடைப்பட்ட சாலையில் இன்று நள்ளிரவில் போக்குவரத்து காவல்துறையினர் வாகனம் ஒன்றை அதிவேகமாக துரத்தி பிடித்தனர். இதில் 21 வயதான வாகன ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கிராஞ்சி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் வழக்கமாக வாகனச் சோதனை செய்துகொண்டிருந்தபோது, வேன் ஒன்றை நிறுத்தும்படி அவர்கள் செய்கை செய்தனர். அதிகாரியின் உத்தரவை பின்பற்ற மறுத்த வேன் ஓட்டுநர் வேகமாக வாகனத்தை செலுத்தினார்.
அதிகாரிகள் அவரை துரத்தி வளைத்துப் பிடித்தனர். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காகவும், மற்ற போக்குவரத்து குற்றங்களுக்காகவும் அவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விசாரணை நடந்துவருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

