மண்டாயில் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவருடன் விபத்துக்குள்ளாகிய 64 வயது ஆடவர் ஒருவர், ஆபத்தான முறையில் காரை ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்திற்காக மே 29ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
மண்டாய் அவென்யூவை நோக்கிச் செல்லும் மண்டாய் ரோட்டில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் அன்றைய தினம் இரவு 7 மணியளவில் தகவல் கிடைத்தது.
அந்த 21 வயது மோட்டார் சைக்கிளோட்டி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்தார் என்றும் பின்னர் அவர் உயிரிழந்தார் என்றும் காவல்துறை தெரிவித்தது.
சந்தேக நபரின் காரில் இருந்த 34 வயது ஆடவர், சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

