தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுவா சூ காங்கில் $212 மில்லியன் மதிப்பிலான திட்டங்கள் அறிவிப்பு

2 mins read
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய திட்டங்கள்
d6141d90-c99c-4350-a4c5-ce296dabbcf6
துணைப் பிரதமர் கான் கிம் யோங் முன்னிலையில், சுவா சூ காங் நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னெய்ன் அப்துல் ரஹீம் (வலம்), சிறுமி காவியசேனாவுடன் கியட் ஹோங்கில் வரவுள்ள புதிய திட்டங்களை அறிவித்தார். - படம்: ரவி சிங்காரம்

சுவா சூ காங் வட்டாரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் $212 மில்லியன் மதிப்பிலான புதிய திட்டங்களைத் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங் அறிவித்துள்ளார்.

சுவா சூ காங் குழுத்தொகுதி உறுப்பினர்கள், ஹாங் கா நார்த் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏமி கோர் ஆகியோருடன் இணைந்து சனிக்கிழமை (ஏப்ரல் 5) திரு கான் அறிவித்த சுவா சூ காங் நகர மன்றத்துக்கான ஐந்தாண்டுத் திட்டத்தில் அதுவும் ஓர் அங்கம்.

அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டத்தின்கீழ் 8,800 இல்லங்களுக்குப் பயனளிக்கும் மேம்பாடுகள் புளோக் அளவிலும் வட்டார அளவிலும் செய்யப்படும்.

40,000 குடும்பங்கள் வசிக்கும் 400 வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளுக்குச் சாயம் பூசப்படும்.

கூடுதலான கூரைவேய்ந்த நடைபாதைகளையும் ஓய்வுக்கூடங்களையும் சுவா சூ காங் வட்டாரத்தினர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம்.

மேலும், ஆறு புதிய பெருவிரைவு ரயில் நிலையங்களும் அந்த வட்டாரத்தில் சேவை வழங்கவிருப்பதாகத் திரு கான் குறிப்பிட்டார்.

அண்மையில் அரசாங்க சேவையிலிருந்து விலகிய ஆக மூத்த அதிகாரியான ஜெஃப்ரீ சியாவ், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழக இணைப் பேராசிரியர் சூ பெய் லிங் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு காணப்பட்டனர்.

பிரிக்லேண்ட் பகுதியில் மிதிவண்டிப் பந்தயத் தடம், புதிய மத்திய ஆள்பலத் தளத்தில் 700 பேர் அமரக்கூடிய புதிய உணவங்காடி நிலையம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.

கியட் ஹோங் கடைத்தொகுதியில் பசுமைக் கூரைகள், சமூகக் கலந்துரையாடல்களுக்கு ஏற்ற கூடுதல் இடவசதிகளும் அமைக்கப்படும்.

புக்கிட் பாத்தோக் இயற்கைப் பூங்கா புதுப்பிக்கப்பட்ட இயற்கைப் பாதைகள், வசதிகளோடு பொலிவுபெறும்.

புளோக் 506 புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 52ல் உள்ள விளையாட்டுப் பூங்காவில் மேம்பட்ட விளையாட்டு அம்சங்கள் இருக்கும்.

தெக் வாய் கடைத்தொகுதியில் புதிய சமூக வளாகங்கள், பசுமையிடங்கள், உடற்பயிற்சிக் கூடங்களை எதிர்பார்க்கலாம்.

சிங்கப்பூரின் முதல் ‘கார்களற்ற’ நகர மையம் தெங்காவில் இடம்பெறும்.

தெங்காவில் பலதுறை மருந்தகம் இந்த ஆண்டில் திறக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்