பொது இடத்தில் ஒரு சிறுமியை மண்டியிடச் செய்து ஆடவர் ஒருவர் கன்னத்தில் கடுமையாக அறைவதைக் காட்டும் காணொளி (படம்: ஸ்டோம்ப்) சமூக ஊடகங்களில் பரவி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் செயல் குறித்து போலிஸ், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றிடம் புகார் செய்யப்பட்டது. அமைச்சும் போலிசாரும் அந்தக் காணொளி, சம்பவம் குறித்த விசாரணையில் இறங்கியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் எடுக்கப்பட்ட இந்தக் காணொளியில் தொடக்கப்பள்ளிப் பருவத்தில் இருக்கும் ஒரு சிறுமி, தெம்பனிஸில் உள்ள ஈக்கியா நிறுவனத்தின் கார் நிறுத்துமிடத்தில் வெள்ளை நிற கார் ஒன்றுக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்திருப்பது தெரிகிறது. அந்தச் சிறுமியின் தந்தை என்று நம்பப்படும் ஓர் ஆடவரும் ஒரு பெண்ணும் அருகில் நிற்பதும் அந்த ஆடவர் அந்தச் சிறுமியைக் காட்டி ஏதோ கூறுவதும் பின்னர் கன்னத்தில் அறைவதும் காணொளியில் பதிவாகி உள்ளது. நேற்று முன்தினம் வரை இந்தக் காணொளியை 30,000 பேர் பார்த்ததாக கூறப்பட்டது.

