ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்கு வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்கு வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள்

1 mins read

சிங்கப்பூரில் அடுத்த வாரம் நடைபெற உள்ள 33வது ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்கான பாதுகாப்புப் பணிகளுக்காக 1,600 ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆசியான் மாநாட்டின் பாதுகாப்புக்கான திட்டமிடுதல் சிக்கலானது என்று சிங்கப்பூர் ஆயுதப்படையின் தற்போதைய நடைமுறைக் குழுவின் தலைவரான கர்னல் லிம் கோக் ஹோங் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இம்மாதம் 15ஆம் தேதி வரை சன்டெக் சிங்கப்பூர் அனைத்துலக மாநாடு, கண்காட்சி மண்டபத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் சீனா, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மாநாடு நடைபெற உள்ள சமயத்தில் சிங்கப்பூரின் வான்வெளி, நீர்ப்பகுதி ஆகியவற்றைப் பாதுகாக்க, 40க்கும் மேற்பட்ட குழுக்களை சிங்கப்பூர் ஆயுதப்படை பணியில் அமர்த்தும். சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியனவும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் என்று கூறப்பட்டது. ஆசியான் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்சும் இந்தியப் பிரதமர் மோடியும் இங்கு வர உள்ளனர்.