ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியில் நடந்த விபத்தில் சம்பந்தப்பட்ட 21 வயது ஓட்டுநருக்குப் பிணை வழங்கப் பட்டுள்ளது. தனது காரை கவனக்குறைவாக ஓட்டி மற்றொருவருக்குக் கடுமையான காயத்தை விளைவித்ததாக நசுஹா நாசர் மீது பல்லர்ட் மஜிஸ்திரேட் நீதிமன்றம் குற்றச்சாட்டியுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறின. மெல்பர்ன் நகருக்குக் கிட்டத்தட்ட 130 கிலோமீட்டர் தூரத்திலுள்ள விண்டர்மியர் நகரில் இந்த விபத்து நடந்தது.
கடந்த சனிக்கிழமை இரவு 8.15 மணிக்கு, நான்கு பயணிகளுடன் இருந்த காரை நசுஹா சாலையில் ஓட்டிக் கொண்டிருந்தபோது சாலைச் சந்திப்பு ஒன்றில் நிறுத்தாமல் வெள்ளைநிற காருடன் மோதி பின்னர் மரம் ஒன்றை மோதினார். வெள்ளைநிற காருக்குள் இருந்த இருவருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றாலும் நசுஹாவின் காரிலுள்ள அனைவரும் காயமுற்றனர். இவர்களில் 26 வயது பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் 21 வயது பெண்ணுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

