ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தின் தொடர்பில் பெற்ற $40 மில்லியன் மோசடிப் பணத்தின் ஒரு பகுதியை மறைத்து வைக்க சகோதரி, அவரது கணவருக்கு உதவியதற் காக ஆடவர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள், எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட் டுள்ளது. அரசாங்க முகவை ஒன்று ஏமாற்றப்பட்டதன் தொடர்பில் இது ஆகப் பெரிய வழக்காகும். லீ சி வாய், 30, தம்முடைய செங்காங் வீட்டில் $6.7 மில்லியன் ரொக்கம், $626,500 மதிப்பிலான 11 கிலோ தங்கம் ஆகியவற்றை மறைத்து வைக்க உதவினார். $282,500 தொகைக்கு 5 கிலோ தங்கம் வாங்கிய அவர், தமக்காக ஒரு கார் வாங்குவதற்காக அவரது சகோதரியிடம் $30,000 கடன் கேட்டிருந்தார்.
கடந்த ஆண்டு நிகழ்ந்த இந்த மோசடியின் தொடர்பில் விசாரிக் கப்பட்ட ஐவரில் தண்டனை பெற்றிருக்கும் முதல் நபர் லீ. லீயின் சகோதரியான லீ லாய் லெங், 40, அவரது கணவர் இங் செங் க்வீ, 42, லீயின் தாயார் டான் யூன் நூய், 60, இங்கின் நண்பர் டேவிட் லிம் வீ ஹோங், 40, ஆகியோருக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. இந்த மோசடியின் மூளையாகச் செயல்பட்டவர் இங் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரர்களிடையே வாழ் நாள் கற்றலை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தின் வழியாக வழங்கிய உதவித் தொகையில் $40 மில்லியனை போலியான ஆவணங் களைச் சமர்ப்பித்து இவர்கள் பணம் பெற்றனர்.

