அரசு நீதிமன்றத்தின் இணையத்தளம் மூலம் வழக்குகள் தொடர்பான 200 கோப்புகள் சட்ட விரோதமாக சில சந்தேக நபர்களால் பார்க்கப்பட்டன என்று நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த குற்றவியல் வழக்கு பதிவு மற்றும் நிர்வாக கணினிக் கட்டமைப்புக்குள் ஊடுருவி, அந்த நபர்கள் மின்னியல் கோப்புகளைப் பார்த்திருக்கிறார்கள் என்று அரசு நீதிமன்றம் கூறியது.
பொதுவாக, அந்தக் கோப்புகளைக் காண அனுமதி வைத்திருக்கும் குற்றம் சாட்டப்பட்ட நபர்தான் தனது சிங்பாஸ் மறைச்சொல்லைக் கொண்டு அவ்வாறு செய்ய முடியும். நீதிமன்ற இணையத்தள கட்டமைப்பில் யாரோ ஊடுருவியிருக்கலாம் என்று இம்மாதம் 1ஆம் தேதி அரசு நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது. அத்துமீறி நுழைந்து 223 மின் கோப்புகளின் ஆவணங்கள் பார்க்கப்பட்டன என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. குறைபாடுகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டன என்றும் வழக்குகளின் நம்பகத்தன்மை பாதிக்கப்படவில்லை என்றும் அரசு நீதிமன்றம் தெரிவித்தது.

