பணத்துக்காக தவறான நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து எச்சரிக்கை

பணத்துக்காக தவறான நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து எச்சரிக்கை

1 mins read

கடன்முதலை நடவடிக்கை தொடர்பாக திங்கட்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை போலிசாரால் நடத்தப்பட்ட சோதனையில் 14 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட மொத்தம் 109 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவையும் ஆறு போலிஸ் நிலப் பிரிவுகளையும் சேர்ந்த அதிகாரிகள் தீவு முழுவதும் நடத்திய அதிரடிச் சோதனைகளில் 79 ஆண்களும் 30 பெண்களும் கைதாகினர். கடன்முதலை நடவடிக்கை தொடர்பில் நடத்தப்பட்ட சோதனைகளில் இவ்வாண்டு கைதானோர் எண்ணிக்கை 1,091 ஆகியுள்ளது.

சமூக வலைத்தளங்களின் விளம்பரங்களை நம்பிச் செல்லும் மாணவர்கள் இவ்வாறு கடன்முதலை நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்களை போலிசார் அண்மைக் காலத்தில் அதிகமாகப் பார்ப்பதாகத் தெரிவித்தனர். இதன் தொடர்பில் பள்ளி விடுமுறை தொடங்கிவிட்ட வேளையில் பணம் சம்பாதிக்க எண்ணும் இளையர்கள் பகுதிநேர வேலைகளில் சேர்வது குறித்துக் கவனமாக இருக்குமாறு போலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.