மலேசிய விமான நிறுவன சேவைகள் தற்காலிக நிறுத்தம்

1 mins read

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஃபயர்ஃபிளை, சிங்கப்பூருக்கான தனது எல்லா விமானச் சேவைகளையும் டிசம்பர் 1 முதல் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சேவைகள், சாங்கி விமான நிலையத்திலிருந்து சிலேத்தார் விமான நிலையத்திற்கு டிசம்பர் 1 முதல் இடம்மாற இருந்தன. சிலேத்தார் விமான நிலையத்திற்கு மாறவேண்டியதன் தொடர்பிலான ஒழுங்குமுறை விவகாரங்களை அதிகாரிகள் தெளிவுபடுத்திய பிறகே தனது சேவைகள் மறுபடியும் தொடங்கும் என்று அந்த நிறுவனம் தனது இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது. ஃபயர்ஃபிளை நிறுவனம் சுபாங், ஈப்போ, குவாந்தான் ஆகிய மலேசிய நகர்களுக்கும் அந்த நகர்களிலிருந்தும் அன்றாடம் சிங்கப்பூருக்கும் 20 விமானச் சேவைகளை நடத்துகிறது.