சிங்கப்பூரில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் 223 மோசடிச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் கிட்டத்தட்ட 622,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மோசடிச் சம்பவங்கள் குறித்து திங்கட்கிழமை (டிசம்பர் 29) காவல்துறை அறிக்கை வெளியிட்டது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அது கேட்டுக்கொண்டது.
இணையத்தளங்களில் பொருள்களை விற்பனைக்கு விடுபவர்களைக் குறிவைத்து மோசடியாளர்கள் செயல்பட்டுள்ளனர்.
மோசடியாளர்கள் பொருள்களை வாங்குவதுபோல் நடித்து, சில நச்சு நிரல் கொண்ட இணையப் பக்கங்களை விற்பனையாளர்களுக்கு அனுப்புகிறார்கள்.
பொருளுக்கான பணத்தை நிரப்பும் படிவம் என்று நினைத்து விற்பனையாளர்களும் சில வங்கித் தகவல்களைக் கொடுக்கிறார்கள். சில நாள்களுக்குப் பிறகு வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டதை அவர்கள் உணர்கிறார்கள்.
வங்கிக் கணக்கில் உள்ள பணம் மூலம் மோசடியாளர்கள் வெளிநாடுகளில் மின்னிலக்க நாணயங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி தடயம் இல்லாமல் தப்பித்துவிடுகின்றனர்.
இணையத்தளங்களில் பொருள்களை விற்கும் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியது. சந்தேகமான இணையப் பக்கங்களை அனுப்பும் நபர்களிடம் கவனமாக இருக்குமாறு அது கேட்டுக்கொண்டது.
மேலும், வங்கிக் கணக்கு விவரங்கள், கடன்பற்று அட்டை தொடர்பான விவரங்களை மற்றவர்களிடம் கொடுக்க வேண்டாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் நினைவூட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல் இணையத்தில் பொருள்களை விற்கும் வியாபாரிகள் முடிந்தவரை வாடிக்கையாளர்களை நேரில் பார்த்துப் பணத்தைப் பெற்ற பிறகு பொருளைக் கொடுக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் மோசடிச் சம்பவங்களால் பொதுமக்கள் பல பில்லியன் வெள்ளி இழந்ததாக அறியப்படுகிறது.
மோசடிகள் குறித்த மேல்விவரங்களுக்கு அது தொடர்பான அவசர தொலைபேசி அழைப்பான 1799 அல்லது www.scamshield.gov.sg. என்ற இணையத்தளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவசரத் தொலைபேசி எண் 1800-255-0000யும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

