மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக மொத்தம் 23 பேர்மீது குற்றஞ்சாட்டப்படும்.
காவல்துறையினரின் வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு, 20 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட அந்த வாகனமோட்டிகள் இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்த வாகனமோட்டிகளில் ஒன்பது பேர்மீது மற்றப் போக்குவரத்துக் குற்றங்களுக்காகக் குற்றஞ்சாட்டப்படும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு $2,000 முதல் $10,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் அதே குற்றம் புரிந்தால், $5,000 முதல் $20,000 வரை அபராதமும் ஈராண்டுவரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
அனைத்து வகை வாகனங்களையும் ஓட்ட குற்றவாளிகளுக்குத் தடை விதிக்கப்படலாம்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது கடுமையான குற்றம் என்றும் அத்தகையோர்மீது உறுதியான நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம் என்றும் போக்குவரத்துக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.