சிங்கப்பூரின் தென்பகுதியில் உள்ள காவல்துறையின் கடலோரக் காவற்படை பிரானி வட்டாரத் தளத்தில் இருந்து வடிந்த 23 டன் டீசல் எண்ணெய்யின் துளிகள் சுற்றுவட்டார கடல்நீரில் மிதந்தன.
புதன்கிழமை (பிப்ரவரி 5) நிகழ்ந்த அந்தச் சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறை, கடல்துறை துறைமுக ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியன கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளன.
எண்ணெய்க் கசிவு புதன்கிழமை முற்பகல் 11.40 மணியளவில் கண்டறியப்பட்டு, பின்னர் பிற்பகல் 3.40 மணியளவில் அது தனியாக ஒதுக்கப்பட்டதாக வியாழக்கிழமை (பிப்ரவரி 6) வெளியிடப்பட்ட அந்த அறிக்கை குறிப்பிட்டது.
சிலாட் செங்கிரில் உள்ள எண்ணெய் நிரப்புப் பகுதியில் சேதமடைந்த எண்ணெய்க் குழாய் வழியாக கிட்டத்தட்ட 23 டன் எண்ணெய் கசிந்ததாகவும் கூட்டறிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செந்தோசா தீவு அருகே உள்ள கடல்நீரில் சிறு எண்ணெய்த் துளிகளைக் கண்டதாக பொதுமக்கள் தெரிவித்தபோதிலும், எண்ணெய்ப் படலம் எதுவும் தென்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செந்தோசாவின் தென்மேற்குக் கடலோரம் முழுவதும் எண்ணெய்த் துளிகள் மிதந்ததைத் தாம் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் சிங்கப்பூர் துடுப்புப் படகு சங்கத்தைச் சேர்ந்த சிரியுஸ் இங் கூறினார்.
கண்ணால் காணும் முன்னர், எண்ணெய்யின் வாசனை வந்தது. துடுப்பில் எண்ணெய்த் துளிகள் ஒட்டியதால் அதனைச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
2024 ஜூன் மாதத்தில் இருந்து சிங்கப்பூரின் கடல்நீரில் நிகழ்ந்திருக்கும் ஐந்தாவது எண்ணெய்க் கசிவுச் சம்பவம் இது.