கட்டுமானத்தளத்தில் கான்கிரீட் கல் தாக்கி 23 வயது ஊழியர் மரணம்

கட்டுமானத்தளத்தில் கான்கிரீட் கல் தாக்கி 23 வயது ஊழியர் மரணம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 May 2026 - 9:52 pm

2 mins read

கட்டுமானத்தளம் ஒன்றில் கடந்த வியாழக்கிழமை (மே 14) ‘கான்கிரீட் சிலாப்’ தாக்கியதில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

250ஏ டர்ஃப் கிளப் ரோட்டில் நிகழ்ந்த வேலை தொடர்பான அந்தச் சம்பவம் குறித்து அன்று பிற்பகல் 1.40 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

சம்பவ இடத்தில் 23 வயது ஆடவர் ஒருவர் அசைவின்றிக் கிடந்ததாகவும் பின்னர் அவர் மாண்டுவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவர் அறிவித்ததாகவும் கூறப்பட்டது.

அந்தச் சம்பவத்தில் சதிச்செயல் ஏதும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறிய காவல்துறை, விசாரணை நீடிப்பதாகத் தெரிவித்தது.

குறுக்குத் தீவு எம்ஆர்டி வழித்தடத்திற்கான கட்டுமானப் பணிகள் அந்த இடத்தில் நடைபெற்று வருவதாக நம்பப்படுகிறது.

கட்டுமானத்தளத்தில் கான்கிரீட் தரையைப் பிளக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது அந்த ஆடவர், பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில் போக்குவரத்தைச் சீர்செய்யும் வேலையில் ஈடுபட்டு இருந்ததாக மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களிடம் கூறினார்.

‘கோ கோக் லியோங் (Koh Kock Leong) கன்ஸ்ட்ரக்‌ஷன்’ என்னும் நிறுவனத்தின் ஊழியரான அவருக்கு, ஆபத்துகளைக் கண்காணித்து, நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வேலை கொடுக்கப்பட்டிருந்தது.

தரையைப் பிளக்கும் பணியின்போது தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த கான்கிரீட் பகுதி ஒன்று அந்த ஊழியரைத் தாக்கியதாகக் கூறப்பட்டது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, தற்காலிக கான்கிரீட் கட்டமைப்புகளை உடைத்து அகற்றும் பணி கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அப்போது அந்தப் பகுதி தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானம்ஊழியர்மரணம்

தொடர்புடைய செய்திகள்