சமூகப் பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கான சம்பள வழிகாட்டிக் குறிப்புகளைச் சுகாதார அமைச்சு புதுப்பித்துள்ளது. இதன்கீழ், இத்துறை சார்ந்த பெரும்பாலான பணிகளுக்கான ஆண்டு ஊதியத்தை 7 விழுக்காடு அல்லது அதற்குமேல் உயர்த்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் சுகாதார அமைப்பில் சமூகப் பராமரிப்பு ஊழியர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். குறிப்பாக, சுகாதார அமைச்சின்கீழ் இயங்கும் மருத்துவமனைகளிலிருந்து சமூக அமைப்புகளுக்குப் பராமரிப்புச் சேவைகளை மாற்றியமைக்கும் சூழலில் இவர்களின் பங்கு இன்றியமையாதது. தற்போது சிங்கப்பூர் முழுவதும் உள்ள சமூகப் பராமரிப்பு அமைப்புகளில் 23,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
சுகாதார அமைச்சின் சம்பள வழிகாட்டிக் குறிப்புகள், 2024ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளியிடப்பட்டன.
துறையின் சந்தைப் போட்டித்தன்மையை நிலைநாட்டுவதும் வேலை தேடுவோர்க்கும் ஊழியர்களுக்கும் கூடுதல் வெளிப்படைத்தன்மையை வழங்குவதும் அதன் மூலம் திறமையாளர்களை ஈர்ப்பதும் தக்கவைப்பதும் இதன் நோக்கங்கள்.
சமூகப் பராமரிப்பு அமைப்புகள் நியாயமான ஊதியக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதற்கு இந்த வழிகாட்டிக் குறிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
இத்துறையிலுள்ள பல்வேறு பணிகளுக்கான தொடக்க, இடைநிலை மாத அடிப்படைச் சம்பளம், சராசரி வருடாந்தர மொத்த ஊதியம் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகள் 2024 முதல் ஏற்பட்டுள்ள சந்தை மாற்றங்களைக் கருத்தில் கொள்கின்றன.
இந்தப் பரிந்துரைகள் கட்டாயமானவை அல்ல என்றாலும், வெளியிடப்பட்ட சம்பள அளவைவிடக் குறைவாக வழங்கும் சமூகப் பராமரிப்பு அமைப்புகள், 2027ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் பரிந்துரைகளுக்கு ஏற்பத் தங்களின் ஊதியத் திட்டங்களைச் சரிசெய்யுமாறு ஊக்குவிக்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதனைச் செயல்படுத்துவதற்குச் சிறிது காலம் எடுக்கக்கூடும் என்பதால், சமூகப் பராமரிப்பு ஊழியர்களும் வேலை தேடுபவர்களும் இந்த வழிகாட்டுதல்களை ஆய்வுசெய்து நடைமுறைப்படுத்த அந்த அமைப்புகளுக்குக் கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மறுபுறம், வெளியிடப்பட்ட சம்பளத்தைவிட அதிக ஊதியம் வழங்கும் அமைப்புகள் தங்களின் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ளவும் ஊழியர்களுக்கான வழக்கமான சம்பள ஆய்வுகளைத் தொடரவும் ஊக்குவிக்கப்படுகின்றன.
சந்தை நிலவரத்திற்கு ஏற்பத் தங்களின் சம்பள நிலைகளைத் தொடர்ந்து ஆய்வுசெய்து, ஊழியர்களைத் தக்கவைக்கவும் ஈர்க்கவும் சமூகப் பராமரிப்பு அமைப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
சமூகப் பராமரிப்பு ஊழியர்களின் சம்பளப் போட்டித்தன்மையைச் சந்தை நிலவரத்துடன் ஒப்பிட்டுச் சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப வழிகாட்டுதல்களை மறுஆய்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

