பொத்தோங் பாசிரில், ‘கேல்வரி பேப்டிஸ்ட்’ தேவாலயத்தில் உள்ள ‘லிட்டில் சீட்ஸ்’ பாலர்பல்ளியில் மொத்தம் 24 குழந்தைகள் இரைப்பைக் குடலழற்சி (gastroenteritis) அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தக் குழந்தைகளில் எழுவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், நால்வர் ஏற்கெனவே வீடு திரும்பியுள்ளனர் என்றும் மற்ற மூவரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் உணவு அமைப்பு, ஆரம்பகால குழந்தைப்பருவ மேம்பாட்டு அமைப்பு ஆகியவைக் கூறின.
பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மூவருக்கு ‘சால்மொனெல்லா’ கிருமி இருப்பதாக டிசம்பர் 2ஆம் தேதி வெளியான ‘சிஎன்ஏ’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விலங்குகளின் குடலில் காணப்படும் ‘சால்மொனெல்லா’ கிருமி, சமைக்காத இறைச்சி, பால் பொருள்கள், கால்நடை, முட்டைகள் ஆகியவற்றில் காணப்படலாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாசடைந்த உணவையும் தண்ணீரையும் உட்கொள்வதன் மூலம், அந்தக் கிருமி மனிதர்களுக்குப் பரவலாம்.
வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி உள்ளிட்டவை அறிகுறிகளில் அடங்கும். இவை நச்சுணவு உண்டால் ஏற்படக்கூடிய அறிகுறிகளுக்குச் சமம்.
இதற்கிடையே, ‘ஆங்கிலிக்கன் பாலர்பள்ளிச் சேவைகள்’ (ஏபிஎஸ்) நடத்தும் அந்தப் பாலர்பள்ளி நிலையம், 18 மாதங்கள் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளைக் கவனித்துக்கொள்கிறது.
தொடர்புடைய செய்திகள்
‘லிட்டில் சீட்ஸ்’ன் மற்ற 15 கிளைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று ஆரம்பகால குழந்தைப்பருவ மேம்பாட்டு அமைப்பு கூறியது.
‘சால்மொனெல்லா’ கிருமிச் சம்பவத்தைத் தொடர்ந்து, நவம்பர் 26 முதல், அனைத்துக் குழு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக ‘ஏபிஎஸ்’ ‘சிஎன்ஏ’ நிறுவனத்திடம் கூறியது.
எல்லாக் குழந்தைகளும் தங்களது வகுப்பறைகளிலேயே இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமையை பாலர்பள்ளி கண்காணித்துவருவதாக ‘ஏபிஎஸ்’ தெரிவித்தது.