வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதிச்சீட்டுகளைப் புதுப்பிக்க அவர்களிடமிருந்து ஏறத்தாழ $400,000 கையூட்டு வாங்கிய 55 வயது டெரிக் ஹோ சியாக் ஹோக்கிற்கு நவம்பர் 14ஆம் தேதியன்று 24 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கையூட்டுத் தொடர்பாக மனிதவள அமைச்சு விசாரணை நடத்திய மிகப் பெரிய கையூட்டு வழக்குகளில் இதுவும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோ மீது 61 குற்றச்சாட்டுகள் பதிவாகின.
அவற்றில் 20 குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.
2014ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 57 வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து அவர் கையூட்டு வாங்கியதாகத் தெரியவந்தது.
வேலை அனுமதிச்சீட்டுகளைப் புதுப்பிக்க ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியரிடமிருந்து அவர் $1,500லிருந்து $3,000 வரை கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வெளிநாட்டு ஊழியர்களின் சராசரி மாதச் சம்பளம் $350க்கும் $500க்கும் இடைப்பட்டது.
ஹோ கேட்ட தொகையை அவரிடம் கொடுத்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு மிகக் கடுமையான கடன் சுமை ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் தங்கள் வேலை அனுமதிச்சீட்டு புதுப்பிக்கப்படாது என்ற அச்சத்தில் வேறு வழியின்றி ஹோ கேட்ட தொகையை அவர்கள் தந்ததாக மனிதவள அமைச்சுத் தரப்பு வழக்கறிஞர் முகம்மது ஃபட்லி தெரிவித்தார்.
பராமரிப்புச் சேவை நிறுவனத்தின் முன்னாள் செயல்முறை மேலாளரான ஹோ, வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து $396,440 கையூட்டு வாங்கினார்.
சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பிய ஒரு வெளிநாட்டு ஊழியரிடமிருந்து ஹோ $14,000 பெற்றுக்கொண்டார்.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று ஹோவின் வீட்டில் மனிதவள அமைச்சு அதிரடிச் சோதனை நடத்தியது.
அப்போது அங்கு இருந்த பாதுகாப்புப் பெட்டியில் மொத்தம் $326,305 ரொக்கம் கண்டெடுக்கப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
குற்றங்களைப் புரிந்தபோது லியான் செங் கான்டிராக்டிங் நிறுவனத்தின் செயல்முறை மேலாளராக ஹோ பணியாற்றிக்கொண்டிருந்தார்.
இந்த நிறுவனம் நீ சூன் மற்றும் பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றங்களின் துணை ஒப்பந்ததாரராக இருந்தது.
செயல்முறை மேலாளர் என்ற முறையில் தமது நிறுவனத்தின் மேற்பார்வையின்கீழ் இருந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டைகளின் பராமரிப்புக்கு ஹோ தலைமை தாங்கினார்.
அதுமட்டுமல்லாது, தமது நிறுவனத்தின்கீழ் செயல்பட்ட பராமரிப்புப் பணி ஊழியர்களுக்கும் அவர் தலைமை தாங்கினார்.

