வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள குளிர்சாதனங்கள் குறித்து 240 புகார்கள் கடந்த 2025ஆம் ஆண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துக்கு அளிக்கப்பட்டன என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெ லிங் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஜனவரி 14) தெரிவித்தார்.
அத்தகைய புகார்கள் கிடைத்ததும், வீவகவின் அதிகாரிகள் சோதனைகள் நடத்தியபின் உரிமையாளர்களிடமும் அண்டைவீட்டார்களிடமும் தேவையான ஆலோசனைகள் வழங்குவர் எனவும் அமைச்சர் கூறினார்.
பொதுவாக குளிர்சாதன இயந்திரங்களைச் சுற்றி சுவர்களிலும் கூரைகளிலும் ஒருவகை பூஞ்சைகள் நீர்த்துளிகளால் படருவது இயற்கையாக நிகழும் பிரச்சினைகளில் ஒன்று.
குளிர்சாதனங்கள் குறித்து எத்தனை புகார்கள் அளிக்கப்பட்டன, பூஞ்சைகளால் பாதிப்படைந்துள்ள சுவர்களையும் கூரைகளையும் குடியிருப்பாளர்கள் எப்படி அவை படராமல் தடுத்து சரி செய்வர் என்று ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெசிக்கா டான் கேள்வி எழுப்பி இருந்தார்.
அண்டை வீட்டார்களிடம் இருந்து இவ்வகை பிரச்சினைகள் உருவெடுப்பதால் அவற்றை கையாள்வது சவாலானது. மேலும் பூஞ்சைகளால் சுகாதார பாதிப்பும் பல குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக திருவாட்டி டான் அவரது கேள்வியில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.
குடியிருப்பாளர்களிடம் அறைகளை நல்ல காற்றோட்டமாக வைத்துக்கொள்ளவும் பூஞ்சைகளுக்கு எதிரான சாயங்களைப் பூசிக்கொள்ளவும் அதிகாரிகள் அறிவுறுத்துவர் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சருமான திருவாட்டி சுன் ஷுவெ லிங் பதிலளித்தார்.
“வீவக, அதன் குடியிருப்பாளர்களுக்கு குளிர்சாதனங்களின் முறையான பயன்பாட்டை விளக்கும் ஆலோசனைக் குறிப்புகளை வழங்கலாம். அவற்றில் அவை பயன்படுத்தப்படும் கால, வெப்பநிலை அளவுகளும் இடம்பெறலாம்,” என்று அமைச்சர் கருத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
சுவர்களையும் கூரைகளையும் மேம்படுத்துவது உண்மையில் இப்பிரச்சினைக்குத் தீர்வாகுமா என்பது ஆராயப்படவேண்டும் என்பதையும் அமைச்சர் தெரிவித்தார்.
அதோடு, இருவீட்டார்கள் இணைந்து எவ்வாறு அத்தகைய மேம்பாடுகளுக்கு பொறுப்பாவர் என்பதையும் ஒவ்வொரு புகாரையும் விசாரித்து அமைச்சு முடிவெடுக்கவேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு, தெங்கா வீவக வீடுகளின் குடியிருப்பாளர்கள், அங்குள்ள மத்திய குளிர்சாதனத்தால் பல குறைபாடுகளை எதிர்கொண்டனர் என்பது ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அங்கு சுவர்களும் கூரைகளும் பூஞ்சைகளால் பெரும் பாதிப்படைந்தன.


