நான்கு நாள்களில் 240 மின்சிகரெட்டுகள் பறிமுதல்

நான்கு நாள்களில் 240 மின்சிகரெட்டுகள் பறிமுதல்

2 mins read
aae6cda0-91c3-4c52-bc41-ec26941f295e
மின்சிகரெட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை ஒப்படைப்பதற்காக வைக்கப்பட்ட பெட்டி அல்லது பையில் போட்டுவிட அனுமதிக்கப்படுகின்றனர். - படம்: ஐசிஏ ஃபேஸ்புக்

சிங்கப்பூர் குடிநுழைவுத் துறை அதிகாரிகள், 42 பயணிகளிடம் மின்சிகரெட்டுகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் நான்கு நாள்களாக சோதனைச் சாவடிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது 240க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகள், அதன் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) தெரிவித்தது.

மார்ச் 24 முதல் 27 வரை 42 பயணிகளிடம் மின்சிகரெட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்கள் தாமாகவே முன்வந்து அதற்காக வைக்கப்பட்ட பையில் போட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்து, நிலம், கடல் வழியான சோதனைச் சாவடிகள் மூலம் நாட்டுக்குள் மின்சிகரெட்டுகள் கொண்டுவருபவர்களுக்கு எதிராக சோதனைகளை ஆணையம் தீவிரப்படுத்தியது.

ஏறக்குறைய 52 விழுக்காட்டுச் சம்பவங்கள் குறுகியகால பயணிகள் தொடர்பானது என்றும் 48 விழுக்காட்டுச் சம்பவங்கள் சிங்கப்பூர்வாசிகள் தொடர்பானது என்றும் ஆணையம் கூறியது.

சிங்கப்பூர்வாசிகளில் குடிமக்கள், நிரந்தரவாசிகள் மற்றும் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்களும் அடங்குவர்.

இந்த நிலையில் மின்சிகரெட்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதமான செயல் என்று தமது பதிவில் ஐசிஏ நினைவூட்டியது. சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டவர்கள் சிங்கப்பூரின் விதிமுறை, சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று அது அறிவுறுத்தியது.

மின்சிகரெட்டுகளை யாராவது வைத்திருந்தால் கடுமையான தண்டனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். குறுகியகால வருகையாளர்கள் பிடிபட்டால் நிரந்தரமாக சிங்கப்பூருக்குள் நுழையத் தடை செய்யப்படும் என்று ஆணையம் மேலும் கூறியது.

எம்பிளாய்மெண்ட் பாஸ், எஸ்-பாஸ், வொர்க் பர்மிட், மாணவர் விசா, டிபெண்டண்ட் பாஸ் உள்ளிட்ட நீண்டகால பாஸ் வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் இத்தகைய குற்றச் செயல்களில் 3வது முறையாக ஈடுபட்டால் அவர்களுடைய அனுமதி ரத்து செய்யப்பட்டு தாயகத்துக்கு திருப்பியனுப்பப்படுவார்கள். சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைய அவர்களுக்குத் தடை விதிக்கப்படும்.

சிங்கப்பூருக்கு வரும் அல்லது சிங்கப்பூர் வழியாக பிற நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் தாமாகவே முன்வந்து மின்சிகரெட்டுகளை அவற்றை அகற்றுவதற்காக வைக்கப்பட்ட பெட்டியில் போட அனுமதிக்கப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்