சட்டவிரோதமாகப் பொருள்சேவை வரியைத் திரும்பப்பெறவும் வரிக் கட்டுவதைத் தவிர்க்கவும் செய்யப்பட்ட (missing trader fraud) மோசடி திட்டத்தின் அங்கமாக இருந்த 46 வயது டான் துவான் ஹெங்க்கு 11 ஆண்டுகள் ஆறு மாதச் சிறைத்தண்டனை பிப்ரவரி 17ஆம் தேதி (திங்கட்கிழமை) விதிக்கப்பட்டது.
இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மொத்த விற்பனை நிறுவனம் ஒன்றின் 704 விற்பனை ரசீதுகளை போலியாகப் தயாரித்ததாகவும் மொத்தம் $240 மில்லியனுக்கும் அதிகமான விற்பனை பரிவர்த்தனைகளை அவை பிரதிபலித்ததாகவும் கூறப்பட்டது.
இந்த மோசடிகளில் ஈடுபட்டபோது அவர், பிரில்லான்டெக் சொல்யூஷன்ஸ் (BSPL) நிறுவனத்தின் இயக்குநராகவும் பங்குதாரராகவும் இருந்தார்.
போலியான விற்பனை ரசீதுகளைப் பயன்படுத்தி அந்நிறுவனம் $16 மில்லியனுக்கும் அதிகமான வரி கோரிக்கைச் செய்தது. இதன் விளைவாக $191,000க்கும் அதிகமான வரித்தொகையைத் திரும்பப்பெறவும் மோசடி கும்பல் திட்டமிட்டிருந்தது.
மீதமுள்ள தொகையுடன் தொடர்புடைய திருப்பித் தரப்படும் வரியை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்) நிறுத்தி வைத்துள்ளது.
இதற்குமுன்னர், 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 11 போலியான விற்பனை பரிவர்த்தனைக்கான ரசீதுகளை டான் சமர்ப்பித்தார். கிட்டத்தட்ட $480,000 வரி கோரிக்கை செய்து அதற்கான வரித்தொகையையும் டான் திரும்பப்பெற்றதாகக் கூறப்பட்டது.