ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ஆம் தேதிவரை மின்சிகரெட் பழக்கத்திற்காக 245 மாணவர்கள், பள்ளிகள், உயர்கல்வி நிலையங்களால் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் (எச்எஸ்ஏ) பரிந்துரைக்கப்பட்டனர்.
அதே மூன்று மாதகாலத்தில், 480க்கும் மேற்பட்ட இளையர்கள் புகைபிடித்தல், மின்புகைத்தல் பழக்கத்தை நிறுத்துவதற்கான ஆலோசனைகளைப் பெற்றனர் என்று சுகாதார அமைச்சும் ஆணையமும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
மேலும், எட்டோமிடேட் பழக்கத்தை கைவிட தனிநபர்கள் தாங்களாகவே முன்வந்து உதவி நாடுவதற்கான ‘குவிட்வேப்’ (QuitVape) என்ற திட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி நிறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்தனர்.
2025 செப்டம்பரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, எட்டோமிடேட்டைத் தவறாகப் பயன்படுத்துதலின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது மற்றும் குவிட்வேப் திட்டத்தில் சேருவோரின் விகிதம் மிதமாகியுள்ளது என்று சுகாதார அமைச்சும் ஆணையமும் தெரிவித்தன.
2025 செப்டம்பர் 1ஆம் தேதிக்கும் 2026 ஜூன் 30ஆம் தேதிக்கும் இடையே, 15 முதல் 44 வயதுக்குட்பட்ட 188 பேர், தாங்களாகவே முன்வந்து குவிட்வேப் திட்டத்தில் சேர்ந்தனர் என்று அந்த இரு அமைப்புகளும் மேலும் தெரிவித்தன.
எட்டோமிடேட்டைத் தவறாகப் பயன்படுத்துதலுக்கு உதவி நாட விரும்புவோர், மனநலக் கழகத்தை அணுகலாம். செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்பே குவிட்வேப் திட்டத்தில் இருந்த தனிநபர்கள், தங்கள் திட்டத்தை நிறைவு செய்வதற்குத் தொடர்ந்து ஆதரவைப் பெறுவார்கள்.
எட்டோமிடேட் என்ற மயக்க மருந்து கலக்கப்பட்ட மின்சிகரெட் திரவங்கள் (கேபாட்ஸ்) என்று அழைக்கப்படுகின்றன. இவை பயன்படுத்துபவர்களிடம் நிலை தடுமாற்ற நடத்தையையும், வலிப்பு, மனநோய் பாதிப்புகளையும் தூண்டக்கூடும்.
மின்புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எந்தவித தண்டனையோ குற்றப் பதிவோ இன்றி, அப்பழக்கத்தைக் கைவிட குவிட்வேப் உதவி பெற வழிவகுத்தது.
எட்டோமிடேட் இல்லாத மின்புகைத்தல் பழக்கத்திற்கு, சுகாதார மேம்பாட்டு வாரியம் ‘நான் கைவிடுகிறேன்’ (ஐ-குவிட்) திட்டத்தைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. மேலும் தகவல்களுக்கு 1800-438-2000 என்ற எண்ணை அழைக்கலாம்.
ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும், தாமாக முன்வந்து உதவி கோருபவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் அல்லது அதற்காக அவர்கள் மீது குற்றப் பதிவு எதுவும் சுமத்தப்படாது என்று தெரிவித்துள்ளன.
எட்டோமிடேட் மற்றும் வழக்கமான ஆவியாக்கிகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் பிடிபட்டால், அதற்கேற்ப தண்டனைகள் தொடர்ந்து விதிக்கப்படும் என்றும் அவை மேலும் கூறின.


