சிங்கப்பூரில் உள்ள வாகனவோட்டிகள் எஸ்ஸோ எரிபொருளுக்கு 25 விழுக்காடு வரையிலான கட்டணக் கழிவுகளை எதிர்பார்க்கலாம்.
பெட்ரோல் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு நன்றி கூறும் விதமாகக் கட்டணக் கழிவுகள் வழங்கப்படுவதாக எஸ்ஸோ அதன் சமூக ஊடகத்தில் ஜூன் 26ஆம் தேதி பதிவிட்டது.
மாற்றங்களைப் பற்றி எஸ்ஸோ நிறுவனம் விவரிக்கவில்லை. இருப்பினும், ஸ்டார் மொபிலிட்டி சலியூஷன்ஸ் 1 நிறுவனம், கோல்ட் ஸ்டோரேஜ் நிறுவனத்துடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட சில்லறை விற்பனைக் கடையை எஸ்ஸோ பெட்ரோல் நிலையங்களில் அறிமுகம் செய்யப்போவதாக இவ்வாண்டு மார்ச் மாதம் தெரிவித்தது.
இந்தோனீசியாவின் சந்திரா அஸ்ரி குழுமத்தின் கிளை நிறுவனமான எஸ்டார், அன்றாடத் தேவைக்கான பொருள்கள், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற உணவுப் பொருள்கள் ஆகியவை கடைகளில் விற்கப்படும் என்றது.
இந்நிலையில், புக்கிட் கோம்பாக், ஹவ்காங், கோவன், மார்சிலிங், பாசிர் பாஞ்சாங், அப்பர் தாம்சன், இயூ டீ ஆகிய வட்டாரங்களில் உள்ள எஸ்ஸோ பெட்ரோல் நிலையங்களின் சில்லறை விற்பனைக் கடைகளில் உள்ள பொருள்கள் கட்டங்கட்டமாக நீக்கப்படுவதைக் காண முடிகிறது.
கோல்ட் ஸ்டோரேஜ் கடைகளுக்கு மாறுவதற்காகத் தற்போதைய கடைகளில் உள்ள பொருள்கள் அகற்றப்படுவதாகப் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் குறிப்பிட்டனர்.
புதிய பொருள்களை வாங்காமல் நிறுத்திக்கொண்டதாகக் கூறிய அவர்கள், விற்கப்படாத பொருள்களை இம்மாத இறுதிக்குள் திரும்பக் கொடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தனர்.
புதிய பங்காளித்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஊழியர்களின் சீருடைகளும் மாற்றப்படுவதாகத் தெரிகிறது.
இம்மாதம் 30ஆம் தேதி மாலை 6 மணிக்குள் எஸ்ஸோ வழங்கும் 25 விழுக்காட்டுக் கட்டணக் கழிவுகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதையடுத்து சிங்கப்பூரில் உள்ள அனைத்து எஸ்ஸோ பெட்ரோல் நிலையங்களும் அன்று இரவு 10 மணிக்கு மூடப்பட்டு, பின் ஜூலை 1ஆம் தேதி காலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.

