சிங்கப்பூரில் மோசடியில் மோசடிக்காரர்களாகவும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்றும் சந்தேகிக்கப்படும் 250 பேரை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். அவர்களில் 166 பேர் ஆடவர், 84 பேர் பெண்கள்.
இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
சந்தேக நபர்கள் 950க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் இணைய வர்த்தக மோசடி, நண்பரைப் போல ஆள்மாறாட்டம் செய்த மோசடி, வேலை மோசடி, அரசாங்க அதிகாரி போல மோசடி, முதலீட்டு மோசடி ஆகியவை அடங்கும்.
அத்தகைய மோசடிகள் மூலம் பாதிக்கப்பட்டோர் இழந்த தொகை $7.74 மில்லியனுக்கும் அதிகம் என்று நம்பப்படுகிறது.
ஏமாற்றியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, உரிமம் இன்றி கட்டணச் சேவைகள் வழங்கியது ஆகியவற்றுக்காகப் பிடிபட்டோர் விசாரிக்கப்படுகின்றனர்.
சிங்கப்பூரில் குற்றவியல் சட்ட மசோதாவில் இம்மாதம் 4ஆம் தேதி திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மோசடிக்காரர்களுக்கும் மோசடிக் கும்பலில் ஈடுபடுவோருக்கும் கட்டாயமாகக் குறைந்தபட்சம் 6 பிரம்படிகளும் அதிகபட்சம் 24 பிரம்படிகளும் விதிக்கப்படும்.
பணமோசடிக்காரர்களுக்கு உடந்தையாக இருப்போருக்கும் கட்டாயமாக 12 பிரம்படிகள் விதிக்கப்படும்.

