இணைய மோசடிகள் மற்றும் அந்தக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்பில் சிங்கப்பூர் போலிஸ் படையின் வர்த்தக விவகாரப் பிரிவும் ஏழு போலிஸ் தரைப்பிரிவுகளும் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி முதல் இம்மாதம் 15ஆம் தேதி வரை தீவு முழுதும் நடத்திய திடீர் சோதனையில் மொத்தம் 251 பேர் சிக்கினர்.
அவர்களில் 163 ஆண்களும் 88 பெண்களும் அடங்குவர். அவர்கள் 15 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இணைய காதல் மோசடிகள், மின் வர்த்தக மோசடிகள்,சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடிகள், போலி சூதாட்டத்தளம், கடன் மோசடிகள் என 421 சம்பவங்களில் விசாரிக்கப்படுபவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த மோசடிகள் மூலம் $3.5 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையைப் பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளனர்.
மற்றவர்களை ஏமாற்றியது அல்லது கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது போன்ற குற்றங்களுக்காக அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
ஏமாற்றும் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறையும் $500,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

