சிங்கப்பூரில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 2,557 தனியார் வீடுகள் விற்பனையாகின. இந்த வீடுகளில் எக்சிகியூடிவ் கொண்டோமினிய வீடுகள் இல்லை.
2023ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது மும்மடங்குக்கு மேலானது என்று நகரச் சீரமைப்பு ஆணையம் திங்கட்கிழமை (டிசம்பர் 16) தகவல் வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 784 தனியார் வீடுகள் மட்டுமே விற்பனையாகின.
மேலும் இவ்வாண்டு அக்டோபர் மாதம் 738 தனியார் வீடுகள் மட்டுமே விற்பனை ஆனது. அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்தின் விற்பனை 246.5 விழுக்காடு அதிகரித்தது.
இதற்கு முன்னர் இவ்வளவு அதிகமாக தனியார் வீடுகள் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் (2,793) விற்பனையானதாக ஆரஞ்சுடீ குரூப் (OrangeTee Group) நிறுவனத்தின் கிறிஸ்டின் சுன் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் வீடு விற்பனையில் எக்சிகியூடிவ் கொண்டோமினிய வீடுகளையும் சேர்த்துக்கொண்டால் அந்த எண்ணிக்கை 2,891க்கு உயரும்.
மேலும் நவம்பர் மாதம் விற்பனைக்கு 3,375 வீடுகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டன.
2023ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 970 வீடுகளே விற்பனைக்கு வந்தன. அதில் 800 வீடுகள் (கொண்டோமினிய வீடுகளையும் சேர்த்து) விற்பனையாகின.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல் இவ்வாண்டு அக்டோபர் மாதம் 970 வீடுகளே விற்பனைக்கு வந்தன. அதில் 766 வீடுகள் விற்கப்பட்டன. (கொண்டோமினிய வீடுகளையும் சேர்த்து).
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதங்களுக்கு இடையில் 6,344 தனியார் புதிய வீடுகள்விற்கப்பட்டுள்ளன. அது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவு.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதங்களுக்கு இடையில் 6,421 தனியார் அடுக்குமாடி வீடுகள் விற்கப்பட்டன.
சில கட்டுமான நிறுவனங்கள் தங்களது வீட்டு விற்பனையை நவம்பர் மாதம் அதிகரித்ததால் வீடுகள் விற்பனை சூடுபிடித்ததாக கவனிப்பாளர்கள் கூறினர்.