சிங்கப்பூர் பொதுத் தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு மூன்று குழுத்தொகுதிகள் உட்பட ஐந்து தொகுதிகளில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி, மக்கள் சக்திக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி ஆகியன களமிறங்கி நான்குமுனைப் போட்டியை ஏற்படுத்தி உள்ளன.
அந்த ஒரு தொகுதியில் போட்டியிடும் நான்கு கட்சிகளைச் சேர்ந்த 20 வேட்பாளர்களில் 12 பேர் புதுமுகங்கள். மசெக, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி தலா இருவரையும் பாட்டாளிக் கட்சி, மக்கள் சக்திக் கட்சி ஆகியன தலா நால்வரையும் புதிதாகக் களமிறக்கி உள்ளன.
மும்முனைப் போட்டி நிலவும் செம்பவாங் குழுத்தொகுதியும் ஐவர் அணியைக் கொண்டது. மசெக, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் சார்பில் களமிறங்கி உள்ள 15 வேட்பாளர்களில், கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி, அதாவது 7 பேர் முதல்முறை போட்டியிடுகின்றனர்.
அங் மோ கியோ குழுத் தொகுதியில் மசெக, மக்கள் சக்திக் கட்சி, சிங்கப்பூர் ஐக்கிய கட்சி ஆகியவற்றின் 15 வேட்பாளர்களில் 9 பேர் புதியவர்கள். குறிப்பாக, அந்தத் தொகுதியில் முதல்முறை போட்டியிடும் மக்கள் சக்திக் கட்சியின் ஐந்து வேட்பாளர்களும் புதுமுகங்கள். ஆக, மூன்று குழுத்தொகுதிகளில் மட்டும் 26 புதுமுகங்கள் களமிறங்கி உள்ளனர். இதுவும் புதிய வரலாறு.
ராடின் மாஸ், பொத்தோங் பாசிர் ஆகிய தனித்தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மும்முனைப் போட்டி நிலவும் தொகுதிகளில் புதுமுகங்கள் யாரும் இல்லாதது பொத்தோங் பாசிரில் மட்டும்தான். அங்கு போட்டியிடும் மசெக, சிங்கப்பூர் மக்கள் கட்சி, சீர்திருத்த மக்கள் கூட்டணி ஆகியவற்றின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கெனவே களம் கண்டவர்கள்.
அதிகமான இளைய வேட்பாளர்கள்
இந்தத் தேர்தலில் அதிகமான இளவயதினர் போட்டியிடுகின்றனர். 40 வயதுக்கு உட்பட்ட 44 பேர் வேட்பாளர்களாகி உள்ளனர். 2020 பொதுத்தேர்தலில் அந்த எண்ணிக்கை 32ஆக இருந்தது.
வேட்பாளர்களில் ஆக இளையவர் 24 வயது ஹெங் ஸெங் டாவ். மக்கள் சக்திக் கட்சி வேட்பாளரான அவர், அங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
ஆக அதிக வயதான வேட்பாளர் டான் செங் போக். அவரது வயது 85. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைவரான அவர்தான் கடந்த தேர்தலிலும் ஆக வயதான வேட்பாளராக இடம்பெற்றார்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் 11 வேட்பாளர்களில் அரிஃபின் ஷா தவிர மற்ற எல்லா வேட்பாளர்களும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதேநேரம், பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களில் மூன்றில் ஒருவர் 40 வயதுக்கு உட்பட்டவர்.

