சிங்கப்பூரில் தானியங்கி தளவாட மையம் ஒன்றை பெரிய அளவில் உருவாக்க $260 மில்லியன் நிதியை ஒதுக்கி இருப்பதாக கேப்பிட்டலேண்ட் முதலீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்காக 19 ஜூரோங் தொழிற்பேட்டைக்கு உட்பட்ட பகுதியில் 5.1 ஹெக்டர் நிலத்தைக் கைப்பற்றி இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
‘ஒமேகா 1 சிங்கப்பூர்’ என்னும் திட்டத்தின்கீழ் ஐந்து தளங்களைக் கொண்டதாக தானியக்க தளவாட மையம் கட்டப்படும்.
அது 2028ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்றும் அந்தக் கட்டடத்தின் தரைத்தளம் 71,000 சதுர மீட்டரைக் கொண்டதாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் வியாழக்கிழமை (ஜனவரி 8) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அது உருவான பின்னர், தானியக்க முறையில், ஏறத்தாழ 60,000 அடுக்குப் பலகைகளில் சரக்குகளை வைக்கவும் எடுக்கவும் முடியும் என்றது அது.
சரக்குகளை அங்கு சேமிக்க தானியக்க முறை இருக்கும். அந்தப் பணிகளில் இயந்திர மனிதர்களையும் ஈடுபடுத்தலாம்.
அது பற்றி கருத்துத் தெரிவித்த கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் குழுமத்தின் உலகளாவிய தளவாடப் பிரிவின் தலைவரும் தென்கிழக்காசிய தலைமை நிர்வாகியுமான திருவாட்டி பேட்ரிசியா கோ, “நவீன, தானியக்கத் தளவாட முறைக்கு இந்த வட்டாரத்தில் அதிகரித்து வரும் தேவையை ஈடுசெய்யும் வகையில் புதிய தானியக்கத் தளவாட மையம் அமையும்,” என்றார்.
மின்னிலக்க ரீதியான நுகர்வு, மூப்படையும் மக்கள்தொகை, அதிகரித்து வரும் ஊழியர் செலவினம் மற்றும் விநியோகத் தொடர் சீரமைப்பு காரணமாக இந்த வட்டாரத்தில் தளவாடத் துறைக்கான தேவை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
‘அல்லை லாஜிஸ்டிக் பிராப்பர்ட்டி’ (ஏஎல்பி) என்னும் நிறுவனத்தின் சில பங்குகளையும் கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் வாங்கி உள்ளது.
புதிய தானியக்கத் தளவாட மையம் தயாரானதும் அது, பெரும் குத்தகை ஒப்பந்தத்தின்கீழ் ஏஎல்பியிடம் முழுமையான குத்தகைக்கு விடப்படும்.
கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட், கடந்த ஈராண்டுகளாக தென்கிழக்கு ஆசியாவில் தளவாடத் துறை மேம்பாட்டுக்காக ஏறத்தாழ $500 மில்லியனை முதலீடு செய்துள்ளது.

