ரஹ்மத்தான் லில் ஆலமின் அறக்கட்டளை (RLAF) ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்), ஜோர்தானின் ‘ஹெஷ்மிட்’ தொண்டு நிறுவனம், உள்ளூர் அமைப்பான ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ ஆகியவை செப்டம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை, காஸாவில் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனிதாபிமான தேவைகளை நிவர்த்தி செய்ய நிதி திரட்டை நடத்தியது.
ஏறக்குறைய மூன்று மாதங்களில் நடைபெற்ற நிதி திரட்டு நடவடிக்கையில் மொத்தம் $2,608,717 (தணிக்கைக்கு முன்) நிதியளித்து சிங்கப்பூரர்கள் தங்களது மனிதநேயத்தை வெளிப்படுத்தினர்.
பல்வேறு நம்பிக்கைகள், வயது, தொழில்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிங்கப்பூர் சமூகம் ஒரு பொதுவான காரணத்திற்காக ஒன்றுபட்டுள்ளது என்று ரஹ்மத்தான் லில் ஆலமின் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி அட்னான் அப்துல் ஹமீத் கூறினார்.
“நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், பங்காளிகள் என அனைவரின் அமோக ஆதரவிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, தங்கள் நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணித்து ஆதரவளித்தனர்,” என்றார் திரு அட்னான்.
நவம்பர் 17 அன்று, 300 தொண்டூழியர்கள் சிங்கப்பூர் முழுவதும் அணி திரண்டு, ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் ‘ஒரே தேசம், ஒரே மனிதநேயம்’ எனும் வாசகங்களைக் கொண்ட ஒட்டுவில்லைகளை விநியோகித்து, சாலைகளில் நிதி சேகரிப்பு மூலம் $57,000 திரட்டினர்.
டிசம்பர் 1ஆம் தேதி, 300க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் 20 டன்னுக்கு மேல் உணவு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஜோர்தானுக்கு அனுப்பி வைத்தனர்.
பசிபிக் இன்டர்நேஷனல் லைன்ஸின் (பிஐஎல்) ஆதரவுடன் ரஹ்மத்தான் லில் ஆலமின் அறக்கட்டளை, ஹியுமேனிட்டி மேட்டர்ஸ் ஆகியவை ஜனவரி 2025ல் காஸாவுக்குள் பொருள்களைக் கொண்டு சேர்க்க நிலப் பரிமாற்றத்தை ஒருங்கிணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, டிசம்பர் 20ஆம் தேதி வெளியிட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவில், “காஸாவில் இருப்பவர்களுக்கு மிகவும் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சிங்கப்பூர் உறுதியுடன் உள்ளது. தாராளமான நன்கொடைகள் மூலமாகவோ அல்லது சாலைகளில் நிதி சேகரிப்பு, அத்தியாவசிய பொருள்களை பொட்டலம் கட்ட உதவிய தொண்டு மூலமாகவோ பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்று தெரிவித்தார்.

