$4.5 மில்லியன் பணம் இழப்பு: ஏழு பெண்கள் உட்பட 27 பேர் மீது வெவ்வேறு குற்றச்சாட்டு

$4.5 மில்லியன் பணம் இழப்பு: ஏழு பெண்கள் உட்பட 27 பேர் மீது வெவ்வேறு குற்றச்சாட்டு

2 mins read
09e95c02-c8b3-478a-a555-9724b17d9859
கைது செய்யப்பட்ட 27 பேரில் 17 வயது இளையரும் உள்ளார். - படம்: சிங்கப்பூர் காவல்துறை
Google News Preferred Icon

சிங்கப்பூரில் $4.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பணம் பறிபோன மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக 27 பேர் மீது நீதிமன்றத்தில் நாளை (செப்டம்பர் 1) முதல் குற்றம் சாட்டப்பட உள்ளது.

இது தொடர்பாகக் காவல்துறை இன்று (ஆகஸ்ட் 31) ஓர் அறிக்கை வெளியிட்டது.

குற்றம் சாட்டப்பட இருப்போர் 17க்கும் 61க்கும் இடைப்பட்ட வயதினர் என்றும் அவர்களில் எழுவர் பெண்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அரசாங்க அதிகாரி, வங்கி அதிகாரி ஆகியோரைப் போலவும் நண்பரைப் போலவும் ஆள்மாறாட்டம் செய்த மோசடிகள், வேலை மோசடிகள், இணைய வர்த்தக மோசடிகள், முதலீட்டு மோசடிகள் ஆகியவற்றுடன் இணைய ஊடுருவல் மோசடிகளிலும் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 27 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த மோசடிகளில் பணம் சம்பந்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை அவர்கள் மீது சுமத்தப்பட உள்ளன.

நம்ப வைத்து ஏமாற்றியது, குற்ற நடவடிக்கை மூலம் ஒருவர் பலனடைய உதவியது, கணினிச் சாதனங்களில் சட்டவிரோதமாக ஊடுருவியது, தேசிய மின்னிலக்க அடையாளச் சேவையுடன் தொடர்புடைய மறைச்சொற்களை சட்டவிரோதமாக வெளிப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளை அந்த 27 பேரும் எதிர்நோக்குகிறார்கள்.

இவர்களில் 26 பேர், தங்களது வங்கிக் கணக்கு, சிங்பாஸ் அடையாளச் சான்றுகள் போன்றவற்றை குற்றக் கும்பல்களிடம் ஒப்படைத்ததாக அல்லது விற்றதாக விசாரணையில் தெரியவந்தது என காவல்துறை கூறியது. அதன் மூலம் அவற்றை சட்டவிரோதக் கும்பல்கள் தவறாகப் பயன்படுத்த சந்தேக நபர்கள் வழிவகுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரே ஒருவர் மட்டும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்க குற்றக் கும்பல்களுக்கு உதவியதும் தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூரில் இவ்வாண்டு முற்பாதியில் மோசடிச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோர் ஏறக்குறைய அரை பில்லியன் வெள்ளியை இழந்துள்ளனர். ஜனவரி முதல் ஜூன் வரை கிட்டத்தட்ட 20,000 மோசடிப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்ற நடவடிக்கை மூலம் பலனடைய உதவிபுரிவோருக்கு மூன்றாண்டு வரையிலான சிறை, அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
மோசடிஏடிஎம்கைதுகுற்றச்சாட்டு