சிங்கப்பூர்க் கடலில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் 27 வயது ஆடவர் மரணம்

2 mins read
382457f2-ffac-48db-8c78-2ce1c5b88709
‘ராயல் கரீபியன் ஓவேஷன் ஆஃப் த சீஸ்’ சொகுசுக் கப்பல் ஜனவரி 19ஆம் தேதி சிங்கப்பூரை வந்தடைந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மலேசியாவின் பினாங்குவரை சென்று மூன்று நாள்கள் கடல் சுற்றுலாவை முடித்துக்கொண்டு திங்கட்கிழமை (ஜனவரி 19) காலை சிங்கப்பூர் திரும்பிய சொகுசுக் கப்பலில் 27 வயது ஆடவர் ஒருவர் சுயநினைவின்றிக் காணப்பட்டார்.

‘ராயல் கரீபியன் ஓவேஷன் ஆஃப் த சீஸ்’ சொகுசுக் கப்பல், திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு மரினா பே சொகுசுக் கப்பல் முனையத்தை வந்தடைந்தது. அதன்பிறகு காலை 6.35 மணிக்கு உதவிகேட்டு அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சுயநினைவின்றிக் கிடந்த அந்த ஆடவர், இறந்துவிட்டதாகக் கப்பலில் பணியில் இருந்த மருத்துவர் உறுதிசெய்தார். அவரது மரணத்தில் சூது எதுவுமில்லை என்று முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், காவல்துறை விசாரணை தொடர்கிறது.

உயிரிழந்தவர் சிங்கப்பூரரா அல்லது வெளிநாட்டினரா என்பது தெரியவில்லை.

சிங்கப்பூரில் ஜனவரி 16ம் தேதி பயணத்தைத் தொடங்கி, மலேசியாவின் பினாங்குத் தீவைச் சுற்றி ஜனவரி 19ஆம் தேதியன்று மீண்டும் சிங்கப்பூர் வந்தடைந்தது அந்தச் சொகுசுக் கப்பல்.

நான்காயிரம் பயணிகள் செல்லக்கூடிய அந்தச் சொகுசுக் கப்பலில் 16 மாடிகளுடன் இரண்டாயிரம் அறைகள் உள்ளன. பினாங்குத் தீவை நோக்கிய அக்கப்பலின் அடுத்த மூன்று நாள் பயணம் ஜனவரி 26ஆம் தேதி தொடங்கவுள்ளது.

அக்கப்பலில் பயணித்த 57 வயதான திருவாட்டி லீனா ஓங், காலை 7.45மணிக்கு கப்பலிலிருந்து இறங்கி வரவேண்டிய தமது குடும்பம் காலை 10 மணிக்குப் பிறகுதான் வெளியேற முடிந்ததாகக் கூறினார். துறைமுகத்தில் கூட்ட நெரிசல் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கப்பலில் பொது அறிவிப்பு செய்யப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

கப்பலில் நேர்ந்த சம்பவம் பற்றி எவ்வித விவரமும் தமக்குத் தெரியாது என்று தெரிவித்த திருவாட்டி லீனா, சுமுகமாக கப்பலைவிட்டு வெளியேறியதாகவும் கூறினார்.

மேல்விவரங்களுக்கு ராயல் கரீபியன் கப்பல் நிர்வாகத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டது.

குறிப்புச் சொற்கள்