லாரி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 27 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) உயிரிழந்தார்.
லோயாங் வேக்கும் லோயாங் லேன்க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்து பற்றிய தகவல் மாலை ஏறத்தாழ 5.20 மணிக்குக் கிடைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்த ஆடவர், சுயநினைவு இழந்த நிலையில் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
இதே இடத்தில் ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட மற்றொரு விபத்தில் வேறொரு மோட்டர் சைக்கிள் ஓட்டுநரின் உயிரும் பறிபோனது.
விபத்தில் சம்பந்தப்பட்ட 41 வயது லாரி ஓட்டுநர், உரிய அக்கறையின்றி அல்லது நியாயமான கவனமின்றி ஓட்டியதன் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது. இதே இடத்தில் ஜனவரி 24ல் ஏற்பட்ட மற்றொரு விபத்தில், காருடன் மோதிய 31 வயது மோட்டார் சைக்கிளோட்டியின் உயிர் பறிபோனது.

