மின்சிகரெட் குற்றங்களுக்காகப் பிடிபட்ட 2,700 பேர்

2 mins read
fbd6b5e0-5d51-4b72-9f7c-2267fb1615be
மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காக செப்டம்பரிலிருந்து நவம்பர் வரை 2,700க்கும் அதிகமானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காக செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து நவம்பர் வரை 2,700க்கும் அதிகமானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து மின்சிகரெட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை நடப்புக்கு வந்தது.

வியாழக்கிழமை (டிசம்பர் 18) சுகாதார அமைச்சும் சுகாதார, அறிவியல் ஆணையமும் இணைந்து அறிக்கை வெளியிட்டன.

அதில் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட் வைத்திருந்ததற்காக 257 பேர் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 162 பேர், மனநலக் கழகத்திலும் சமூகச் சேவை அமைப்புகளிலும் உள்ள மறுவாழ்வுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

பிடிபட்டோரில் ஆறு பேர் வெளிநாட்டினர். அவர்களில் சிலர் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். சிலர் அனுப்பப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர்.

முதல் மறுவாழ்வுத் திட்டத்திற்குச் செல்லத் தவறிய மூவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்களுக்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

கூடுதலாக, மின்சிகரெட் குற்றங்களுக்காக மீண்டும் பிடிபட்ட 18 பேர் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் மறுவாழ்வுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 14 பேர் மறுவாழ்வுத் திட்டத்தில் சிறந்து விளங்குகின்றனர். எஞ்சிய நால்வர் விசாரிக்கப்படுகின்றனர்.

எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்ட ஐவர் மறுவாழ்வுத் திட்டத்தின் முதல் அங்கத்திற்குச் செல்லத் தவறினர்.

அத்தகையோரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு $10,000 வரையிலான அபராதமோ ஈராண்டு வரை சிறைத் தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

மின்சிகரெட் தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுக்காக போதைப்பொருள் தொடர்பான மறுவாழ்வு நிலையத்தில் சேர்க்கப்பட்ட முதல் நபருக்கு வயது 16. அவர் மூன்றாவது முறையாக எட்டோமிடேட் பயன்பாட்டுக்காகப் பிடிபட்டார்.

தைவானிலிருந்து வேலை அனுமதிச்சீட்டில் சிங்கப்பூர் வந்த 26 வயது ஆடவர் அக்டோபர் 21ஆம் தேதி எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுக்காகப் பிடிபட்டார்.

ஆடவரின் வேலை அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டதுடன் அவர் சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்