மணமக்கள் சேவை நிறுவனம் மூடப்பட்டதால் $271,000 இழப்பு, பலர் புகார்

மணமக்கள் சேவை நிறுவனம் மூடப்பட்டதால் $271,000 இழப்பு, பலர் புகார்

2 mins read
4be94589-6ee6-4ac1-9482-f0898c898ef0
செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ‘கொரியா ஆர்டிஸ் ஸ்டூடியோ’ வுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்றபோது, ​​அங்கு யாரும் இல்லை. விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் மணமக்கள் உடை, புகைப்படங்கள் போன்ற சேவைகளை வழங்கி வந்த ‘கொரியா ஆர்டிஸ் ஸ்டூடியோ’ என்னும் நிறுவனம் மூடப்பட்டதால் அந்நிறுவனத்திடம் முன்பணம் செலுத்தியோர் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளனர்.

அறுபதுக்கும் மேற்பட்டோர் ஏறத்தாழ $271,000 முன்பணம் கொடுத்திருந்ததாகத் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனம் திடீரென தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதாகத் தகவல் கிடைத்தது என சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங், புதன்கிழமை (ஆகஸ்ட் 19) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

அந்த நிறுவனத்தின் சேவைகளுக்காக முன்பணம் செலுத்தியவர்களிடமிருந்து ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 18 வரை மொத்தம் 66 புகார்கள் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஒப்புக்கொண்டபடி சேவைகளை வழங்க வேண்டும் அல்லது முன்பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் நிறுவனத்தைத் தொடர்புகொண்டதாகவும் ஆனால் அவர்களுக்கு அந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை என்றும் திரு யோங் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சேவைகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதை அறிந்துகொள்ள பயனீட்டாளர் சங்கம் ‘கொரியா ஆர்டிஸ் ஸ்டூடியோ’வைத் தொடர்புகொண்டுள்ளதாக அவர் கூறினார்.

“சேவைகளை நிறைவேற்ற இயலாவிட்டால், பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படும் தீர்வுகள் குறித்தும் சங்கம் விளக்கம் கோரியுள்ளது,” என்றார் திரு யோங்.

ராஃபிள்ஸ் சிட்டி கடைத்தொகுதிக்கு அருகிலுள்ள கார்ல்ட்டன் ஹோட்டலில் இயங்கி வந்த கொரியா ஆர்டிஸ் ஸ்டூடியோ’ தனது ஊழியர்களுக்குச் சம்பளம் தரவில்லை என்பது பின்னர் தெரியவந்தது.

நிறுவனத்திற்குள் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ஊழியர்கள் யாருக்கும் சம்பளம் தரப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு ஒன்று நிறுவனத்தின் கதவில் ஒட்டப்பட்டிருந்ததை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ கண்டது.

செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அந்த ஸ்டூடியோவிற்குச் சென்றபோது, ​​அங்கு யாரும் இல்லை. விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன.

மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக அந்நிறவனத்தினருடன் தொடர்புகொள்ள அந்தச் செய்தித்தாள் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இந்தச் சம்பவம் குறித்து கருத்து அறிய மனிதவள அமைச்சை அது தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பயனீட்டாளர்இழப்புபுகார்