சிங்டெல் குழுமத்தின் வர்த்தகங்களில் ‘ஏஐ’ பயன்பாடுகள், அதற்குரிய திறனாளர்களை உருவாக்குதல், பணியமர்த்துதல், நிர்வாக, உள்கட்டமைப்பு நிறுவல் ஆகியவற்றுக்காக நிதியுதவி பெறவுள்ளது.
பல்வேறு தளங்களில் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில், அந்நிறுவனம், சிங்கப்பூர் மின்னிலக்கத் தொழில்துறை (DISG) அமைப்புடன் கைகோத்துள்ளது. இந்த உத்திபூர்வ பங்காளித்துவம், பல ஆண்டுகளில் அந்நிறுவனத்தில் நடைபெறவுள்ள உருமாற்றங்களுக்கு ஆதரவளிப்பதுடன், புதிய நிபுணர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் வழங்கும்.
சிங்கப்பூரின் தேசிய செயற்கை நுண்ணறிவு உத்தி 2.0 திட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்தப் பங்காளித்துவத்துக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 5) நடைபெற்றது.
சிங்டெல் ‘ப்யூச்சர்நவ்’ புத்தாக்க நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இதில் சிங்டெல் குழுமத் தலைவர்களுடன், ‘ஓபன் ஏஐ’ நிறுவனத் தலைவரும், சிங்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தும் ‘ஏஜென்டிக் ஏஐ’ ‘சியாரா’வின் (Sierra) இணை நிறுவனருமான ப்ரெட் டெய்லர் பங்கேற்றார்.
‘ஏஐ’ தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை அளிக்கும், உலகிலேயே திறன்மிக்க, இணைக்கப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறுவதும் எங்கள் முக்கிய நோக்கம்,” என்று கூறிய சிங்டெல் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி யூவென் குவான் மூன், “ஊழியர் மேம்பாட்டிலும் பெரிதும் கவனம் செலுத்தி வருகிறோம். சிங்டெல் ஊழியர்கள் அனைவருக்கும் ஏஐ பயன்பாட்டுத்திறனைப் பரவலாக்கி வருகிறோம். எங்கள் ஊழியர்களிலிருந்து 3,000 ‘ஏஐ’ பயன்பாட்டாளர்களையும், 300 நிபுணர்களையும் உருவாக்கும் திட்டம் உள்ளது,” என்றார்.
“சிங்டெல் சிங்கப்பூர் பல்வேறு தளங்களிலும் ‘ஏஐ’ பயன்பாட்டை உள்புகுத்தியுள்ளது. ‘ஏஜென்டிக் ஏஐ’ மூலம் வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்தப் பணியாற்றி வருகிறோம். இந்தப் பங்காளித்துவம் எங்களது செயல்பாடுகளை மாற்றுவதுடன், நிறுவனங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ளவும் உதவுவதற்கான அர்ப்பணிப்பையும் மறுவுறுதி செய்கிறது,” என்றார் சிங்டெல் சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரி இங் டியன் சோங்.
தொடர்ந்து, ஊழியர்கள் வேலையிழப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், “மனநிலை மாற்றம் முக்கியமானது. ‘ஏஐ’ வேலையைப் பறிக்கும் எனும் மனத்தடையை வெல்வது சவாலானது. இதனை நிறுவனத் தலைவர்கள் புரிந்துகொள்வது அவசியம். எங்கள் நிறுவனத்தில் பணிக்குழு உருமாற்றத்துக்கு வலுவான ஆதரவு தருகிறோம்,” என்றார்.
பொது நன்மைக்காக ‘ஏஐ’ தொழில்நுட்பம்
தேசிய உத்தி, தொழில்துறை தலைமைத்துவம், பொறுப்பான செயலாக்கம் ஆகியவை ஒன்றிணைந்து பொது நன்மைக்காக செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல் குறித்துக் கலந்தாலோசிக்கும் அமர்வும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
‘பொது நன்மைக்காக செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல்: தேசிய உத்தியிலிருந்து வர்த்தகத் தாக்கம் வரை’ எனும் கருப்பொருளில் அது நடைபெற்றது.
“ஏஐ தொழில்நுட்பத்தினால் தாக்கம் ஏற்படக்கூடும். அரசாங்கம், தொழில்துறை, ஊழியர்கள், சமூகம் என அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயல்படுவது உற்பத்தித்திறன், வளர்ச்சி வாய்ப்புகள், புதிய சந்தைப் பிரிவுகள், புதிய வர்த்தக மாதிரிகள் என அதன் நன்மைகளிலிருந்து முழுமையாகப் பலனடைவதை உறுதிசெய்யும்,” என்றார் மூத்த துணையமைச்சர் டான்.
தொடர்ந்து, ‘ஏஐ’ தொடர்பான இடர்கள், கட்டுப்பாட்டு முறைகள், சிறிய, நடுத்தரத் தொழில்கள் இத்தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்தும் அவர் விளக்கினார்.
“ஏஐ தொழில்நுட்பத்தின் வரவு அறிவுத்திறனை அனைவரது கைகளிலும் கொண்டுசேர்த்துள்ளதாகக் கருதுகிறேன்,” என்று கூறிய ப்ரெட் டெய்லர், இதன் வளர்ச்சி, அதையொட்டிய பொருளியல் முன்னேற்றம், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் சொன்னார்.
இந்த வளர்ச்சி அதிவேகமாக நடைபெற்று வருவதை ஒப்புக்கொள்வதாகச் சொன்ன அவர், சிங்கப்பூர் அதற்கேற்ற பொதுத்துறை, தனியார்த்துறை ஒப்பந்தங்களை மேற்கொள்வது சிறப்பானதென்றும் சொன்னார்.
“இத்தொழில்நுட்பம் அனைவருக்கும் புதிதானது என்பதால், அதனைக் கற்று மேம்பட அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிட்டியுள்ளது,” என்று சொன்ன அவர், “தென்கிழக்காசிய வட்டார வளர்ச்சியின் மீது நம்பிக்கை உள்ளது. சியரா நிறுவனத்தைப் பொறுத்தவரை, நாங்கள் சிங்கப்பூரில் முதலீடு செய்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ளோம்,” என்றும் தெரிவித்தார்.

