$4.4 மில்லியனுக்கும் அதிக மோசடி தொடர்பில் 280 பேரிடம் விசாரணை

$4.4 மில்லியனுக்கும் அதிக மோசடி தொடர்பில் 280 பேரிடம் விசாரணை

இரு வார அதிரடி நடவடிக்கையில் 15 முதல் 81 வயது வரையிலான 189 ஆண்களும் 91 பெண்களும் பிடிபட்டனர்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

08 Oct 2026 - 2:56 pm

2 mins read

கிட்டத்தட்ட $4.4 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய மோசடிகளில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 81 வயது முதியவர் உட்பட 280 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இரு வார அதிரடி நடவடிக்கையில் 15 முதல் 81 வயது வரையிலான 189 ஆண்களும் 91 பெண்களும் பிடிபட்டதாக வியாழக்கிழமை (அக்டோபர் 8) காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதிவரை இணையப் பாதுகாப்புப் பிரிவும் ஏழு தரைப் பிரிவு காவல் அதிகாரிகளும் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

இவர்கள் மோசடியாளர்களாகவோ அல்லது சட்டவிரோதமாகப் பணத்தைப் பெற்றுக் கைமாற்றுபவர்களாகவோ செயல்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மின்-வணிகம், வேலைவாய்ப்பு, போலி அரசாங்க அதிகாரி, முதலீடு, அதிர்ஷ்டக் குலுக்கல் உள்ளிட்ட 633க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் இவர்களுக்குத் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது. ஏமாற்றுதல், பணமோசடி, உரிமமின்றி பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.

ஏமாற்றுதல் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம். பணமோசடிக் குற்றத்திற்கு $500,000 வரை அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரையிலான சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மோசடிக் கும்பல்களுக்கு உதவியாகச் செயல்படுபவர்களுக்குப் பிரம்படிகளும், வங்கி, கைப்பேசிச் சேவைக்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மோசடிகளால் பொதுமக்கள் $410.6 மில்லியனை இழந்துள்ளனர். இதில் $97 மில்லியனுக்கும் அதிகமான தொகையைக் காவல்துறை மீட்டுள்ளது. இதில் அரசு அதிகாரிகள்போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளால் மட்டும் $90.8 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மோசடி தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மோசடிகைதுகாவல்துறைஅதிரடி நடவடிக்கை