காருக்குள் பல்வேறு இடங்களில் 2,800 மின்சிகரெட்டுகளையும் அதன் சார்ந்த பொருள்களையும் பதுக்கி வைத்திருந்த ஆடவர் துவாஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகளிடம் சிக்கினார்.
இச்சம்பவம் கடந்த மாதம் நவம்பர் 17ஆம் தேதி நடந்தது என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் அறிக்கைமூலம் தகவல் வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 55 வயது சிங்கப்பூர் ஆடவர், காரின் இருக்கைகள், பொருள்கள் வைக்கப் பயன்படும் காரின் பின்பகுதி உள்ளிட்ட இடங்களில் மின்சிகரெட்டுகளைப் பதுக்கிவைத்திருந்தார்.
சம்பவம் தொடர்பான படங்களையும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை இனி சுகாதார அறிவியல் ஆணையம் விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் செப்டம்பர் மாதம்முதல் மின்சிகரெட்டுகள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை இறக்குமதி செய்பவர்களுக்கும் பயன்படுத்துபவர்களுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

