மரினா ஸ்குவேர் கடைத்தொகுதியில் ஆடவர் ஒருவர், வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றியபோது 2,172 போலிக் கணக்குகளை உருவாக்கினார்.
அதன்மூலம் அவர் கிட்டத்தட்ட 28,000 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகளைப் பெற்று மோசடி செய்தார்.
போலிக் கணக்குகளைக் கடைத்தொகுதிக்கான செயலிமூலம் உருவாக்கி, பரிந்துரைத் திட்டத்தை (referral scheme) அவர் தவறான முறையில் பயன்படுத்தினார்.
அரவிந்தரன் வல்லபன் என்னும் இந்த 26 வயது ஆடவருக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) ஓராண்டு மற்றும் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தன்மீது சுமத்தப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
பற்றுச்சீட்டுகளைத் தனது சொந்தச் செலவுகளுக்காக அரவிந்தரன் பயன்படுத்தினார். மோசடி செய்த தொகையை அவர் முழுமையாகத் திருப்பிச் செலுத்திவிட்டார்.
2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அரவிந்தரன் மோசடி செயலில் ஈடுபட்டார்.
கடைத்தொகுதியின் வாடிக்கையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பற்றுச்சீட்டுகளைத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, போலியான கைப்பேசி எண்கள்மூலம் ஆயிரக்கணக்கான கணக்குகளை அரவிந்தரன் உருவாக்கி மோசடியில் ஈடுபட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பல பற்றுச்சீட்டுகள் சில கணக்குகளுக்கு வழங்கப்பட்டதை அடையாளம் கண்ட கடைத்தொகுதியின் உயரதிகாரி விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அரவிந்தரனின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

