பாலர் பள்ளி நிர்வாக உதவியாளராக 13 ஆண்டுகளுக்குமுன் பாலர் கல்வித் துறையில் தமது பயணத்தைத் தொடங்கினார் திருவாட்டி பெனாசிர் ஹனிஃப் முகமது, 31.
ஆயினும், மாணவர்களுடன் நேரடியாக உரையாடி, அவர்களது வளர்ச்சிக்கு வித்திடுவதே தம்மை ஈர்ப்பதாக உணர்ந்த அவர், பாலர் பள்ளி ஆசிரியராகத் தகுதிபெற பட்டயக்கல்வி மேற்கொண்டார்.
இப்போது அவர் சாட்ஸ்வர்த் பாலர் பள்ளியின் (கிளமெண்டி) மூத்த தலைமையாசிரியராகவும், இளம்பருவ வளர்ச்சிக்கான தேசிய கல்விக்கழகப் (NIEC) பயிற்சியாசிரியர்களுக்கான இணை மேற்பார்வையாளராகவும் (Adjunct Supervisor) பணிபுரிகிறார்.
அத்துடன், தேசிய கல்விக்கழகத்தில் பாலர் கல்வி முதுநிலைப் பட்டப் படிப்பையும் பகுதிநேரமாகப் பயின்று வருகிறார் திருவாட்டி பெனாசிர். அதற்கான முழுச் செலவையும் ஈடுகட்டும் உபகாரச் சம்பளத்தை இவ்வாண்டு அவர் ஒருவருக்கே பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு வழங்கியது.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) நடைபெற்ற பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் வருடாந்தர விருதளிப்பு விழாவில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அவருக்கு இவ்விருதை வழங்கினார்.
தலைமைத்துவப் பண்புகளையும், கூடுதல் பொறுப்புகளை ஏற்கும் நாட்டத்தையும் கொண்டுள்ள பாலர் கல்வி ஆசிரியர்கள் இத்துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளை மேற்கொள்ள இந்த உபகாரச் சம்பளம் ஆதரவு வழங்குகிறது.
“பாலர் கல்வித் துறை அர்த்தமுள்ளது என்பதை உணர்த்தி, வளர்ந்துவரும் ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ விரும்புகிறேன்,” என்றார் திருவாட்டி பெனாசிர்.
விழாவில் 269 பயிற்சி விருதுகளும், 13 பாராட்டு விருதுகளும் வழங்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பாலர் கல்வித் துறையில் முழு[Ϟ]நேரப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் பயிற்சி விருதுகளுக்குத் தகுதிபெறுகின்றனர். படிப்புக்கான நிதியாதரவு, கற்றல் மற்றும் தொழில்துறை வளார்ச்சி மானியங்கள், மாதாந்திர கல்வி நிதி ஆகியவையும் விருதில் அடங்கும்.
ஏற்கெனவே பயிற்சி விருதுகளைப் பெற்று தம் படிப்பை சிறப்பாக முடித்துள்ள மாணவர்களுக்கு 1,000 வெள்ளி மதிப்பிலான பாராட்டு விருது[Ϟ]களும் வழங்கப்படுகின்றன.
தமிழாசிரியராக ஆசை
எதிர்காலத்தில் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஆசை உயர்நிலைப் பள்ளியிலேயே தன் மனத்துள் துளிர்விட்டதாகக் கூறினார் பாராட்டு விருது பெற்ற ஜி டர்ஷினி, 21.
“அதனால் நான் வழக்க நிலை, சாதாரண நிலைத் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பாலர் கல்வியோடு தமிழ்ப் படிப்பை மேற்கொண்டேன்,” என்றார் அவர்.
பாராட்டு விருதுகளைப் பெற்ற 21 வயது நுர் ரோஸ்லீனாவும் 20 வயது ஷர்மினா அப்துல் சாதிக்கும் சிறப்புத் தேவைத் துறையில் நாட்டம் கொண்டுள்ளனர்.
ரெய்ன்போ சென்டரில் ஆறு மாத பயிற்சி மேற்கொண்ட ரோஸ்லீனா, தற்போது ஸ்கூல்4கிட்ஸ் பாலர் பள்ளியில் சிறப்புத் தேவைக் கொண்ட மாணவர்களையும் சாதாரண கல்விமுறையில் சக மாணவர்களோடு இணைத்துவருகிறார்.
தெம்பனிஸ் இ-பிரிட்ஜ் பாலர் பள்ளி ஆசிரியரான ஷர்மினா, ஆரம்பகால இடையீட்டுக் கல்வியாளராகவோ கல்வித்திட்ட நிபுணராகவோ விரும்புகிறார்.
கூடுதல் ஆதரவு
தங்களது கற்பித்தல் முறைகளுக்குத் துணைபுரிய புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டிகளை பாலர் கல்வி ஆசிரியர்கள் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம் என்றார் அமைச்சர் மசகோஸ்.
2024 இறுதிக்குள் அனுபவமிக்கக் கல்வியாளர்களுக்கான மதியுரை வழிகாட்டி, 2025 தொடக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆரம்பகால வளர்ச்சிக் கட்டமைப்புக் கல்வியாளர் வழிகாட்டி (EYDF Educators’ Guide), 2025 பிற்பாதியில் தரமான கற்பித்தல் கருவி ஆகியவற்றைப் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு வெளியிடும் என்றும் அவர் சொன்னார்.
“என்னைப் போல, படிப்பு முடித்து புதிதாகச் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு இது வெகுவாக உதவும்,” என்றார் ஷர்மினா.
“பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு நம் கல்வியாளர்களின் நலத்தையும் வேலையிடச் சூழலையும் மேம்படுத்தும் வழிமுறைகளைத் தொடர்ந்து ஆராயும்,” என்று அமைச்சர் மசகோஸ் கூறினார்.