திங்கட்கிழமையன்று (நவம்பர் 23) நிறைவடைந்த உயர்நிலை இருதரப்புக் கூட்டத்தின் முடிவில், வர்த்தகம் மற்றும் நிதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொதுச் சுகாதாரம் ஆகிய துறைகளில் சிங்கப்பூரும் சீனாவும் 29 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
சீனத் துணைப் பிரதமர் டிங் சூசியாங்குடன் இணைந்து இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய துணைப் பிரதமர் கான் கிம் யோங், இரு நாடுகளின் பங்காளித்துவம் தொடர்ந்து எவ்வாறு பரிணமித்து வருகிறது என்பதை இது ரதிபலிக்கிறது என்று கூறினார்.
இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு மன்றக் கூட்டத் தொடருக்குப் பின்னர் தமது நிறைவுரையில் பேசிய அவர், இரு நாடுகளின் வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களிலும் காலத்துக்கு ஏற்பப் பொருத்தமாகவும் தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்படும் திறனே சிங்கப்பூர்-சீனா உறவின் முக்கியச் சிறப்பம்சமாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
சூழ்நிலைகள் மாறினாலும், இரு தரப்பினரும் தங்களை அதற்கேற்ப மாற்றிக்கொண்டு, ஒருவருக்கொருவர் வலுச்சேர்க்கும் அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு நடைமுறை ஒத்துழைப்புக்கான புதிய பகுதிகளைத் தொடர்ந்து கண்டறிந்து வருவதாகத் திரு கான் தெரிவித்தார்.
22வது முறையாக நடைபெறும் இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு மன்றக் கூட்டத்தைச் சிங்கப்பூரும் சீனாவும் மாறி மாறி ஏற்று நடத்துகின்றன. இவ்வாண்டுக்கான பேச்சுவார்த்தைகள் ஷங்கிரி-லா சிங்கப்பூர் ஹோட்டலில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றன.
அறிவிக்கப்பட்டுள்ள 29 ஒப்பந்தங்கள் அண்மைய ஆண்டுகளில் எட்டப்பட்ட மிக அதிகபட்ச எண்ணிக்கையாகும். 2025ஆம் ஆண்டில் தென்மேற்குச் சீன நகரமான சோங்சிங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 27 ஒப்பந்தங்களும் 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் 25 ஒப்பந்தங்களும் எட்டப்பட்டன.
இவ்வாண்டு எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து விரிவாகக் கூறிய திரு கான், சேவைகள், வர்த்தகம் தொடர்பான புரிந்துணர்வுக் குறிப்பை இரு தரப்பினரும் புதுப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இது நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும் பயனீட்டாளர்கள் சுகாதாரப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, நிபுணத்துவம், சட்டம் மற்றும் பிற சேவைகளைப் பெறுவதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
நிதித் துறையில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடிய சிறிய மதிப்பிலான கட்டணப் பரிமாற்றங்களுக்கான விரைவுக் கட்டண முறை இணைப்பு குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ரென்மின்பி கட்டண வழிகளுக்கு வலுச்சேர்ப்பதுடன், சிங்கப்பூரில் உள்ள மக்களும் வணிகங்களும் சீனச் சந்தையை எளிதாக அணுக வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பொதுச் சுகாதாரத் துறையில் பரிமாற்றங்களையும் கற்றலையும் எளிதாக்கும் புதிய ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் அமைப்புகளும் கையெழுத்திட்டுள்ளதாக அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் சிங்கப்பூர்த் தரப்பில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
