செர்டிஸ் பாதுகாப்பு நிறுவனம், 29 உடற்குறையுள்ளோருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின்கீழ் மொத்தம் 66 உடற்குறையுள்ளோர் பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் வேலை வாய்ப்பு பெற்ற செல்வி இயோ ஹுய் சிங், 29, கே.ஆர். டே, 30, ஆகிய இருவரும் லீ கோங் சியான் குறிப்பு நூலகத்தில் நூலக சேவை உதவியாளராகப் பணியாற்றி வருகின்றனர்.
புத்தகங்களை அடுக்கி வைப்பது, நூலகம் வருவோருக்கு குறிப்புப் புத்தகங்களைக் கண்டுபிடித்துத் தருவது, அவர்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து தருவது உள்ளிட்டவை அவர்களுடைய பணிகளாகும்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செர்டிஸ் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் அவர்களுக்கு வேலை கிடைத்தது.
இரு ஊழியர்களும் ‘ஆட்டிசம்’ என்று குறிப்பிடப்படும் தொடர்புத் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்.
அதே ஆகஸ்ட் மாதத்தில் செர்டிசால் வேலைக்கு அமர்த்தப்பட்ட 29 தனிப்பட்டவர்களில் அவர்களும் அடங்குவர். தற்போது மொத்தம் 66 உடற்குறையுள்ளோர் அந்நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
2020ஆம் ஆண்டில் முதல் முதலாக இரண்டு உடற்குறையுள்ள ஊழியர்களை அந்நிறுவனம் வேலையில் சேர்த்தது. அதன் பிறகு உடற்குறையுள்ளோரை வேலைக்கு அமர்த்தி வருகிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட செர்டிசின் துணைத் தலைமை நிர்வாகி லீ ஹோக் ஹெங், உடற்குறையுள்ளோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வழிகளை தொடர்ந்து கண்டறிவதாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அனைவரும் வாய்ப்புகளுக்குத் தகுதியானவர்கள், இந்த வாய்ப்புகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்றார் அவர்.
தேசிய முயற்சியான உடற்குறையுள்ளோருக்கான பெருந்திட்டத்தையொட்டி (Enabling Masterplan) செர்டிஸ் அனைவரையும் உள்ளடக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
உடற்குறையுள்ள 15 முதல் 64 வயது வரையிலான வேலை வாய்ப்பு விகிதம் 2020 முதல் 2021 வரை 30.1 விழுக்காடாக உள்ளது. இந்த விழுக்காட்டை 2030ஆம் ஆண்டுக்குள் 40 விழுக்காடாக அதிகரிப்பது அரசாங்க பெருந்திட்டத்தின் இலக்காகும்.

