சிங்கப்பூரில் தமது முன்னாள் காதலியை $400,000 ஏமாற்றிய சந்தேகத்தின்பேரில் 29 வயது ஆடவர் ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
முன்னாள் காதலி செவ்வாய்க்கிழமையன்று காவல்துறையில் அது குறித்து புகார் செய்திருந்தார். புகார் செய்த 48 மணி நேரத்திற்குள் அந்த ஆடவர் பிடிபட்டதாகக் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அந்த மாது வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க உதவும் ‘டேட்டிங்’ தளம் வழியாக அந்த ஆடவரைச் சந்தித்தார்.
இருவரும் பழகத் தொடங்கிய பிறகு, அந்த ஆடவர் மாதிடம் முதலீட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார்.
மாதிடம் பணம் கேட்டு அதனை முதலீடு செய்யப்போவதாக அவர் கூறினார். மாதிற்காக நல்ல வருவாயை ஈட்டிக் கொடுக்கப்போவதாகவும் அவர் சொன்னார்.
இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து மாது அவருக்கு $400,000 கொடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவரால் அந்த ஆடவரைத் தொடர்புகொள்ளமுடியவில்லை.
ஆடவர் கைதானதும், அவரின் வங்கிக் கணக்குகளும் வர்த்தகக் கணக்குகளும் முடக்கப்பட்டன. விசாரணையின் ஒரு பகுதியாக மின்னணுக் கருவி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆடவருக்குப் பத்தாண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

