துவாஸ் சவுத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) இரவு 29 வயது ஆடவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் 25 வயது இளையர் மீது திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
துவாஸ் சவுத் ஸ்திரீட் 15ல், துவாஸ் சவுத் அவென்யூ 14ஐ நோக்கிச் செல்லும் சாலையில் இரவு 10.10 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் அந்த ஆடவர் அசைவற்றுக் கிடந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் உறுதிசெய்தார்.
பாதிக்கப்பட்டவரும் சந்தேக நபரும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்று காவல்துறை குறிப்பிட்டது. புகார் கிடைத்த நான்கு மணி நேரத்திற்குள் 25 வயது இளையர் கைது செய்யப்பட்டார்.
தொழிற்பேட்டைப் பகுதியான அந்தச் சாலையில் சில கனரக வாகனங்களைத் தவிர வேறு நடமாட்டம் இருக்காது என்றும் அங்குத் தொழிலாளர்கள் தங்கும் விடுதி ஒன்று உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையின் புலன்விசாரணை தொடர்கிறது. கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த இளையருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.


