ஏறத்தாழ 29,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட உள்ளன.
இவை 1997ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு கட்டப்பட்டவை.
கட்டட அமைப்பு மேம்படுத்தப்படுவதுடன் வீடுகளின் குளியலறை, வாசல் உட்பட பல அம்சங்கள் புதுப்பிக்கப்படும்.
இதுதொடர்பான விவரங்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) அறிவித்தது.
வீட்டில் மூத்தோருக்கு ஏற்புடைய அம்சங்களைப் பொருத்த வீட்டு உரிமையாளர்கள் தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேம்பாட்டுப் பணிகளுக்காக தீவெங்கும் 371 புளோக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சுவா சூ காங், பாசிர் ரிஸ், தெம்பனிஸ், ஜூரோங் வெஸ்ட் முதலிய வட்டாரங்களில் இருக்கும் அந்த வீடுகளை மேம்படுத்த அரசாங்கம் $407 மில்லியனுக்கும் மேல் ஒதுக்கியுள்ளது.
இல்ல மேம்பாட்டுத் திட்டம் 2007ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பழைய குடியிருப்புப் பேட்டைகளை மேம்படுத்துவதே இதன் இலக்கு.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி இத்திட்டத்துக்காக ஏறத்தாழ $4 பில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள பைனியர் வட்டாரத்தில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் இல்ல மேம்பாட்டுத் திட்டம் பற்றி பேசினார்.
இதுவரை 494,000 வீவக வீடுகள் அல்லது தகுதி பெற்ற பத்து வீவக வீடுகளில் ஒன்பது வீடுகள் இல்ல மேம்பாட்டுத் திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அமைச்சர் லீ சுட்டினார்.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீடுகளும் இவற்றில் அடங்கும் என்றார் அவர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளில் கிட்டத்தட்ட 381,000 வீடுகள் மேம்படுத்தப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.
“பைனியர் வட்டாரத்தில் பத்து குடியிருப்புக் கட்டடங்களைச் சேர்ந்த 1,200க்கும் அதிகமான வீடுகள் இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதிக்கு எதிர்ப்புறத்தில் இருப்பவை. ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் 1ல் உள்ள புளோக் 687லிருந்து 696 வரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன,” என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.
வீடுகள் கட்டப்பட்ட ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டு இல்ல மேம்பாட்டுத் திட்டத்துக்காக அவை தேர்வு செய்யப்படுகின்றன.
அதன் பிறகு, மேம்பாட்டுப் பணிகள் நடத்தப்படுவது குறித்து குடியிருப்பாளர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குறைந்தது 75 விழுக்காட்டு குடியிருப்பாளர்கள் வாக்களித்தால் மட்டுமே மேம்பாட்டுப் பணிகள் நடத்தப்படும்.
வாக்களிக்கும் குடியிருப்பாளர்கள் சிங்கப்பூரர்களாக இருக்க வேண்டும்.
இல்ல மேம்பாட்டுத் திட்டம் இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
அத்தியாவசிய மேம்பாடுகள் பிரிவும் குடியிருப்பாளர் விருப்பத்துக்கு விடப்படும் பிரிவும் அவற்றில் அடங்கும்.
உரிந்து வரும் கான்கிரீட், பிளவுகளைப் பழுதுபார்க்கும் பணி போன்றவை அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகளின்கீழ் வரும்.
பழைய வீடுகள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய இது முக்கியம்.
சிங்கப்பூர் குடும்பங்களுக்கு இதற்கான செலவை அரசாங்கம் முழுமையாக ஏற்கிறது.
புதிய கதவுகளைப் பொருத்துவது, கழிவறை மற்றும் குளியலறையைப் புதுப்பிப்பது போன்றவை குடியிருப்பாளர் விருப்பத்துக்கு விடப்படும் பிரிவின்கீழ் வரும்.
வீட்டு வகையைப் பொறுத்து, இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கான செலவில் 95 விழுக்காட்டை அரசாங்கம் ஏற்கிறது.
உதாரணத்துக்கு விருப்பத்துக்கு விடப்படும் பிரிவின்கீழ் ஓரறையிலிருந்து மூவறை வீடுகளின் உரிமையாளர்கள் $599.50 செலுத்த வேண்டும். அரசாங்கம் $11,390.50 செலுத்தும்.

